ஜம்மு காஷ்மீரில் அரசுப் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர் பல மாதங்களாக அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வார் மாவட்டத்தில் சத்ரூ பகுதியிலுள்ள பமல்போரா அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகவும் பொறுப்புத் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வந்த காலித் உசேன் என்ற ஆசிரியர், அதே பள்ளியில் படித்த மாணவியை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் மாணவி 5 மாத கர்ப்பமானார். இதையறிந்த ஆசிரியர், தனது சகோதரர் தாரிக் என்பவரின் உதவியுடன் சட்டவிரோதமாக சில மாத்திரைகளைக் கொடுத்து மாணவிக்கு கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளார்.
இதனால் மாணவியின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கிஷ்த்வார் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்தார்.
மாணவி சுமார் 5 மாத கர்ப்பமாக இருந்தது பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து சத்ரூ மற்றும் கிஷ்த்வார் பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு நீதி வேண்டி போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பிரதான குற்றவாளியான ஆசிரியர் காலித் உசேன் மற்றும் அவரது சகோதரர் தாரிக் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் காலித் உசேன் உடனடியாகப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சட்டவிரோதக் கருக்கலைப்பு முயற்சியில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
போலி மாத்திரைகளை வழங்கிய மருந்தக உரிமையாளர் மற்றும் சில உறவினர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.