ஜம்மு காஷ்மீர் புறநகர்ப் பகுதியில் உள்ள பலூரா என்ற இடத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையான பிஎஸ்எப் உடைய முதன்மை முகாம் அமைந்துள்ளது.
இங்கு மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த லால் சிங் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
ஒரு மாத கால நீண்ட விடுமுறை முடிந்து நேற்று (சனிக்கிழமை) தான் அவர் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை முகாமில் யாரும் எதிர்பாராத நேரத்தில் தனது சர்வீஸ் ரைபிள் துப்பாக்கியை எடுத்து லால் சிங் திடீரென சுட்டுக் கொண்டார்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டு சக வீரர்கள் ஓடி வருவதற்குள் அவர் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தற்கொலை குறித்துத் தகவல் அறிந்தவுடன் பிஎஸ்எப் உயர் அதிகாரிகளும், ஜம்மு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
லால் சிங்கின் உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை மற்றும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
தற்கொலை நடந்த இடத்திலிருந்து கடிதம் எதுவும் இதுவரை மீட்கப்படவில்லை. பணிச்சுமை அல்லது தனிப்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக அவர் இந்த முடிவுக்கு வந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.