இந்தியா

"ஜாமியா மாணவர் போராட்டத்தில் 'காஷ்மீர் விடுதலை' முழக்கங்கள் எழுப்பப்படவில்லை": காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத்

இந்த நாட்டின் எதிர்காலமாக விளங்கும் மாணவர்களின் குரலை நசுக்க ஏன் முயற்சிக்கிறீர்கள்?

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் போது, "காஷ்மீர் விடுதலை" (Free Kashmir) கோரி எந்தவொரு முழக்கங்களும் எழுப்பப்படவில்லை என்று காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாமியா மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கச் சென்ற இம்ரான் மசூத், பின்னர் டெல்லி போலீசாரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

போராட்டத்தை பலவீனப்படுத்த சதி

ஜாமியா வளாகத்தில் 'காஷ்மீர் விடுதலை' கோரி ஒரு முழக்கம் கூட எழுப்பப்படவில்லை. நான் அங்கு கூடியிருந்த அனைவர் முன்னிலையிலும் எழுந்து நின்று, இதுபோன்ற முழக்கங்களை கடுமையாகக் கண்டித்தேன். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்தேன்.

இருப்பினும், ஜம்மு காஷ்மீர் தொடர்பாக அங்கு போஸ்டர்களை ஒட்டியவர்கள், மாணவர்களின் இந்த நியாயமான போராட்டத்தை பலவீனப்படுத்தவும், சீர்குலைக்கவும் முயல்கிறார்கள். அவர்களுக்கும் இந்த மாணவர் போராட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

போஸ்டர் ஒட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை

இத்தகைய போஸ்டர்களை ஒட்டிய நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதிதான், அதில் எந்த மாற்றமும் இல்லை. இங்குள்ள ஒரு குழந்தை கூட மாற்றிப் பேசாது. மாணவர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை.

மாணவர் சங்கத் தேர்தலை ஏன் இன்னும் நடத்தாமல் இருக்கிறீர்கள்? இந்த நாட்டின் எதிர்காலமாக விளங்கும் மாணவர்களின் குரலை நசுக்க ஏன் முயற்சிக்கிறீர்கள்? என்று அவர் கைது செய்யப்படுவதற்கு முன் கேள்வி எழுப்பினார்.

பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை

மாணவர்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக நிர்வாகம் உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

துணைவேந்தர் பேராசிரியர் மஜார் ஆசிப், பதிவாளர் பேராசிரியர் முகமது மாதாப் ஆலம் ரிஸ்வி மற்றும் மூத்த அதிகாரிகள் அக்டோபர் 18 அன்று நடத்திய ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு, 7 பேர் கொண்ட இந்த உயர்மட்டக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து, வளாகத்தில் இயல்பு நிலையைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT