இந்தியா

3 இந்தியர்கள் உயிரிழந்த விவகாரம்: அமெரிக்க கடற்படைத் தாக்குதலுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் கடும் கண்டனம்

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பு தூதரை இந்தியா வரவழைத்தது.

வளைகுடாப் பகுதியில் அமெரிக்கக் கடற்படை நடத்திய தாக்குதல்களில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.

ரூபியோவுடனான பேச்சுவார்த்தை குறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், "வணிகக் கப்பல் போக்குவரத்துக்கு எதிராக இத்தகைய உயிரிழப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் நியாயமற்றவை" என்று கூறினார்.

இந்த வாரம் ஓமன் கடற்கரை பகுதியில் இந்திய குழுவினரை கொண்ட மூன்று கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. அவற்றில் ஒன்றின் மீதான தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.

"அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் இன்று மாலை பேசினேன். வளைகுடா பகுதியில் அமெரிக்க கடற்படை நடத்திய தாக்குதல்களில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் இந்தியாவின் கடும் எதிர்ப்பை நான் மீண்டும் வலியுறுத்தினேன்," என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக தனது எதிர்ப்பை பதிவு செய்வதற்காக, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பு தூதரை இந்தியா வரவழைத்தது.

முன்னதாக, ஹார்முஸ் நீரிணையில் இருந்து வெளியேறும் இந்திய கப்பல்கள் மீது ஈரான் டிரோன் தாக்குதல்களை நடத்தியதாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இது "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறியிருந்தார்.

"ஹார்முஸ் நீரிணையில் இருந்து வெளியேறும் இந்திய கப்பல்கள் மீது நேற்று இரவு ஈரான் நடத்திய டிரோன் தாக்குதல் முயற்சி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்கள் தங்கள் போக்கை உடனடியாக மாற்றிக்கொள்வது நல்லது," என்று 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் டிரம்ப் பதிவிட்டிருந்தார்.