இந்தியா

ஜெய் பங்களா vs ஜெய் ஸ்ரீராம் - திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே வெடித்த கோஷ மோதல்

மேற்குவங்கத்தில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் இடையே வெடித்த கோஷ மோதல்

மேற்குவங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப். 23 மற்றும் ஏப்ரல் 29 என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக வியாழன்கிழமையன்று 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அனைத்துத் தொகுதிகளுக்குமான வாக்குகள் மே 4 எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதனிடையே இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸும், பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மேற்குவங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் நடிகரும் பாஜக எம்.பி.யுமான ரவி கிஷன், ஹவுரா உத்தர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ரமேஷ் ராய்க்கு ஆதரவாக இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தின் முன்பாக பேரணி வந்தபோது, ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் 'ஜெய் பங்களா' என முழக்கமிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பதிலுக்கு பாஜக தொண்டர் ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டுள்ளனர். இப்படி மாறி மாறி இருதரப்பும் கோஷமிட அப்பகுதியில் பதற்றம் நிலவியுள்ளது.

இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் இருதரப்பினர்மீதும் தடியடி நடத்தியுள்ளனர். பின் நிலைமை கட்டுக்குள் வர, ரவி கிஷனின் வாகனம் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றது. தொடர்ந்து காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் அப்பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.