திருப்பதி:
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டாவில் நடுரோட்டில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இளைஞரணி தலைவர் ரஷீத் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரை நேரில் சென்று பார்வையிட்டு முன்னாள் முதல்-மந்திரியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தெலுங்கு தேசம் ஆட்சியில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 45 நாள் ஆட்சியில் 36 படுகொலைகள், 300-க்கும் மேற்பட்ட படுகொலை முயற்சிகள், 560 இடங்களில் தனியாரின் சொத்துக்கள் சேதம் உள்ளிட்டவை நடந்துள்ளன. 490 அரசு சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்களால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீது வீடு புகுந்து தாக்குதல்கள் நடந்துள்ளன.
எனவே ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரி வரும் 24-ந் தேதி டெல்லியில் ஒய்.எஸ்.ஆர். கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சிக்களுடன் தர்ணா போராட்டம் நடத்தப்படும்.
ஆந்திர மாநிலத்தின் நிலைமை குறித்து பிரதமர் மோடியை சந்தித்து புகார் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.