இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கைப் பயணத்தை விவரித்து உருவாகியுள்ள சுயசரிதைப் புத்தகம் “பிலாங்கிங்: தி ஜர்னி ஆஃப் லவ்” (Belonging: A Journey of Love).
சோனியா காந்தி இத்தாலியின் ஒரு சிறிய நகரில் கழித்த தனது குழந்தைப் பருவம் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்கை நினைவுகள், ராஜீவ் காந்தி உடனான திருமணம், அவரது இழப்பு என தனது வாழ்வின் முக்கிய அங்கங்களை இதில் பகிர்ந்துள்ளார்.
இப்புத்தக்கம் நவம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் புத்தகம் தொடர்பாகவும், தனது தந்தையின் பிறந்தநாளான இன்று தனது தாய் சோனியா குறித்து உருக்கமானப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்.,
“அம்மா,
உங்களையும், அப்பாவையும் ஒன்றாக நான் கடைசியாகப் பார்த்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அப்பா நம்மை விட்டுச் சென்ற நாளிலிருந்து, வாழ்க்கை உங்கள் முன் நிறுத்திய சவால்கள் அனைத்தையும் நீங்கள் எத்தகைய அளப்பரிய துணிச்சலுடனும், கண்ணியத்துடனும் எதிர்கொண்டீர்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன்.
நீங்கள் எத்தகைய சூழல்களைக் கடந்து வந்தீர்கள் என்பதையும், அப்பாவுக்குப் பிந்தைய உங்கள் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தது என்பதையும் பிரியங்காவும் நானும் மட்டுமே முழுமையாக அறிவோம்.
உங்களை நேசிக்கும் லட்சக்கணக்கான மக்கள், உங்கள் கதையான "Belonging: A Journey of Love"-ஐ வாசிக்கப்போகிறார்கள் என்பதை நினைத்து நான் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன்.
இயல்பிலேயே தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பாத ஒருவரான நீங்கள், உங்கள் அழகான கதையை உலகிற்குச் சொல்வதற்கு எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும்.
இன்று, அவருடைய பிறந்தநாளில், அப்பா புன்னகைத்தபடியே, பெருமையுடன் தன் அழகான சோனியாவைப் பார்த்துக் கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது.
அன்புடன்,
ராகுல்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.