இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவில் ஒரே ஆண்டில் 120 விஞ்ஞானிகள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இஸ்ரோ ராஜினமா செய்வதற்கான விதிகளை கடுமையாக்கியுள்ளது.
தகவல்களின்படி, இஸ்ரோவிலிருந்து கடந்த சில மாதங்களில் மட்டுமே 100 முதல் 120 விஞ்ஞானிகள் வரை விலகிள்ளனர்.
இஸ்ரோவில் உள்ள 14,600க்கும் மேற்பட்டோர் தற்போது பணியாற்றி வருகின்றனர். இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ராஜினாமாக்களின் எண்ணிக்கை சிறியதாகத் தெரியலாம்.
ஆனால் ராஜினாமா செய்தவர்கள் அனைவரும் ககன்யான், சந்திராயன் உள்ளிட்ட திட்டங்களில் முக்கியமான பங்காற்றியவர்கள் என்பதுதான் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.
இஸ்ரோவின் மிகப்பெரிய மையமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் மட்டும் சுமார் 20 பேர் விலகியுள்ளனர்.
இதில் இந்தியாவின் எல்விஎம்3 ராக்கெட் திட்ட இயக்குநர் விக்டர் ஜோசப் அடங்குவார்.
யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் இங்கிருந்து சுமார் 80 விஞ்ஞானிகள் வரை ராஜினாமா செய்துள்ளனர்.
இதில் விண்வெளித் துறைக்கான 'ஸ்பாடெக்ஸ்' திட்ட இயக்குநர் மற்றும் சந்திரயான்3 திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த இளம் விஞ்ஞானிகள் அடங்குவர்.
சந்திரயான் 3 விண்கலம் நிலவில் இறங்குவதை கண்காணிக்கும் குழுவின் திட்ட மேலாளராக இருந்த ஆதித்யா ரல்லபள்ளி என்பவரும் ராஜினாமா செய்துள்ளார்.
இவர் தான் பலகட்ட சோதனைகளை மேற்கொண்டு விண்கலம் தரையிறங்குவதை உறுதி செய்தவர்.
இஸ்ரோவில் 2012 முதல் 2024 வரை சுமார் 700 ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
விஞ்ஞானிகளின் இந்தத் தொடர் விலகலால் நாட்டின் கௌரவமிக்க விண்வெளித் திட்டங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க இஸ்ரோ, ராஜினாமா விதிகளை மாற்றியமைத்துள்ளது.
ககன்யான் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் பணியாற்றும் 'குரூப் ஏ' விஞ்ஞானிகளின் விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா கோரிக்கைகளை இனிமேல் வழக்கமான முறையில் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
கடந்த 2020 நவம்பரில் கொண்டுவரப்பட்ட விதியின்படி, விஞ்ஞானிகளின் ராஜினாமா கடிதங்களை ஏற்கும் அதிகாரம் இஸ்ரோவின் அந்தந்த மையங்களின் இயக்குநர்களுக்கே வழங்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த அதிகாரம் பறிக்கப்பட்டு, அனைத்து ராஜினாமா விண்ணப்பங்களும் விண்வெளித் துறையின் (DoS) இறுதி முடிவுக்கே அனுப்பப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட திட்டங்கள் முடியும் வரை இயக்குநர்கள் இவர்களின் ராஜினாமாவை ஏற்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் விலகல்கள் குறித்து இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் அளித்த பேட்டியில்,
"விஞ்ஞானிகள் விலகுவது என்பது எந்தவொரு நிறுவனத்திலும் நடக்கும் இயல்பான ஒன்றுதான். ஆனால், முக்கியத் திட்டங்கள் இதனால் திடீரெனப் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாராவது விலகினாலும், அவர்களுக்குப் பதிலாக வேறு நபர் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். இதற்கான மாற்று ஏற்பாடுகளை இஸ்ரோ திறம்படச் செய்து வருகிறது" என்று கூறியுள்ளார்.
தற்போது இஸ்ரோவின் 2025-26 ஆண்டறிக்கையின்படி, 1,050 புதிய அறிவியல் மற்றும் நிர்வாகப் பணியிடங்களை நிரப்பும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.