இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவில் ஆய்வு மேற்கொள்ள 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 விண்கலத்தை ஏவியிருந்தது.
விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது செயலிழந்த போதிலும், அதன் ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வருகிறது.
இந்நிலையில் சந்திரயான் 2 ஆர்பிட்டர், நிலவின் தென்துருவத்தில் நிலத்தடி பனிப்பாறை நீர் உள்ளதற்கான தடயங்களை கண்டறிந்துள்ளது.
ஆர்பிட்டர் அனுப்பியுள்ள தரவுகள் குறித்து அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் முடிவில், நிலவின் தென்துருவத்தில் சூரிய ஒளி எப்போதுமே படாத, கடுமையான குளிர்கொண்ட நிரந்தர நிழல் பிரதேசங்களின் மேற்பரப்பிற்கு அடியில் மிக அதிகமான அளவில் பனிப்பாறை வடிவ நீர் மூலக்கூறுகள் உறைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, அங்குள்ள Fastini Basin என்ற பெரிய பள்ளத்தின் நிலத்தடிப் பகுதியில் நீர் இருப்பதற்கான மிக வலுவான சான்றுகள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவில் கண்டறியப்பட்டுள்ள இந்த உறைந்த பனிப்பாறைகளை மனிதர்கள் குடிநீராகவும், சுவாசிப்பதற்கான ஆக்சிஜனாகவும், ராக்கெட்டுகளுக்கு தேவையான ஹைட்ரஜன் எரிபொருளாகவும் மாற்றியமைக்க முடியும் என்பதால் இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல்கல்லாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.