டெல்லி இன்று தொடங்கி நாளை வரை இரு தினங்களுக்கு 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் உள்ளிட்ட உறுப்பு நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
பாரத் மண்டபத்தில் மாநாடு நடந்து வரும் சூழலில் தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதேநேரம் நகரை அழகுபடுத்தி காட்ட எடுக்கப்பட்ட முயற்சிகள் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன.
ஏழை மக்கள் வாழும் குடிசைப் பகுதிகளும், சேரிகளும் திரைகள் கொண்டு மறைக்கப்பட்டுள்ளன.
இதன் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன
இதனை கேலிச் சித்திரம் வெளியிட்டு விமர்சித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, "சேரிப் பகுதிகளை திரையிட்டு மறைப்பதால் நிஜம் மாறப்போவதில்லை. 2.6% ஜிடிபி வளர்ச்சியை 7.8% என அழைப்பது போன்றுதான் இதுவும் ஒரு ஏமாற்று வேலை" என குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, "பாஜகவிற்கு எல்லா 'ஹிஜாப்'களும் பிடிக்காமல் இல்லை; பிரதமரின் தோல்விகளையும் நாட்டின் வறுமையையும் மூடி மறைக்கும் இந்தத் திரையை தான் அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்" என்று சாடியுள்ளார்.
வறுமையை ஒழிப்பதற்குப் பதிலாக வெளிநாட்டு விருந்தினர்களிடம் இருந்து வறுமையை மறைப்பதே அரசின் நோக்கமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பும் ஜி20 போன்ற முக்கியச் சர்வதேச நிகழ்வுகளின் போது டெல்லியின் முக்கியச் சாலைகளின் இருபுறமும் உள்ள குடிசைகளைத் திரையிட்டு மறைத்ததற்காக மத்திய அரசு விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.