இந்தியாவையே உலுக்கிய தர்மஸ்தலா வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்குத் தொடர்பு இருப்பதாகச் செய்திகள் பரவி வரும்நிலையில், இதுதொடர்பாக விரைவில் விளக்கமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரகாஷ் ராஜ்.,
“அனைவருக்கும் வணக்கம். ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக என்னைப் பற்றிய சில செய்திகள் விவாதிக்கப்படுவது என் கவனத்திற்கு வந்துள்ளது. இது மிகவும் உணர்வுபூர்வமான ஒரு விஷயம் என்பதாலும், லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையைப் புண்படுத்திய விவகாரம் என்பதாலும், இது தொடர்பான சந்தேகங்களுக்குப் பதிலளிப்பது எனது கடமையாகும்.
நான் தற்போது வெளியூரில் இருக்கிறேன்; இன்னும் இரண்டு நாட்களில் நேரில் வந்து ஊடக நண்பர்கள் வாயிலாகப் பதிலளிப்பேன். அதுவரை, சில விஷமிகள் இச்செய்தியுடன் தேவையற்ற வதந்திகளையும், மிகைப்படுத்தப்பட்ட தகவல்களையும் இணைத்துப் பரப்புவதை, நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதர் கோயிலில் ஏராளமான பெண்களும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக், கொல்லப்பட்டு கோயில் நிலத்திலேயே புதைக்கப்பட்டதாக அங்கு பணிசெய்த முன்னாள் தூய்மை பணியாளர் அளித்த புகார் நாட்டையே அதிரவைத்தது.
இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க மாநில அரசால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சின்னையா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தர்மஸ்தலத்தின் தர்மாதிகாரியும், மாநிலங்களவை உறுப்பினருமான வீரேந்திர ஹெக்கடேவுக்கு எதிராக அவதூறு பரப்பவே சிலர் தன்னை இவ்வாறு செய்ய தூண்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சதிதிட்டத்தின் பட்ஜெட் ரூ.200 கோடி எனவும், தன்னுடைய வேலையை சரியாக செய்தால் தனக்கு ரூ.50 லட்சம் தருவதாக மகேஷ் ஷெட்டி என்பவர் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிரகாஷ் ராஜ் என்பவர் தன்னை தொடர்புகொண்டு பேசியதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் அந்த பிரகாஷ்ராஜ், நடிகர் பிரகாஷ் ராஜா? என கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இதற்கு விளக்கமளிப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.