இந்தியா

வெறும் ரூ.370 தானா பெண் உடல்? சர்ச்சை பேச்சால் இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கிய ஸ்டாண்ட் - அப் காமெடியர்

சர்ச்சைக் கருத்துகளை தொடர்ந்து ஹிமான்ஷு ஜங்ரா தான் வேலைசெய்த நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

ஸ்டாண்ட்-அப் காமெடியர் பிரணித் மோர் நிகழ்ச்சி ஒன்றில், பெண் உடலையும், சம்மதத்தையும் பணத்தோடு ஒப்பிட்டுப் பேசிய இளைஞரின் வீடியோ பெரும் வைராலகி சர்ச்சைக்கு வழிவகுத்தது. அந்த இளைஞர் பேசினாலும், பிரணித் மோர் அதை தடுக்கவில்லை என்றும், அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வந்தது.

இந்நிலையில் இந்த எதிர்வினைகளால் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கியுள்ளார் பிரணித் மோர்.

சர்ச்சைக்கான காரணம் என்ன?

பிரணித் மோரின் ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சியின் போது, பார்வையாளர்களில் இருந்த ஹிமான்ஷு ஜங்ரா என்ற இளைஞர், ஒரு பெண்ணுடன் டேட்டிங் சென்ற கதையைக் கூறினார்.

அந்த இளைஞர், அந்தப் பெண்ணுக்கு ரூ.370 விலையுள்ள சிக்கன் பிரியாணி வாங்கிக் கொடுத்ததாகவும், தொடர்ந்து அந்தப் பணத்தை ஈடுகட்ட, தோனவில்லை என்றாலும் அந்தப் பெண்ணுக்கு முத்தம் கொடுத்ததாகவும், அந்தப் பெண் தடுத்தும் அவளை உடல்ரீதியாக அணுகியதாகவும் சிரித்துக்கொண்டேக் கூறினார்.

இதனை பிரணித் மோர் உள்ளிட்ட அனைவரும் சிரித்துக்கொண்டே கேட்டனர். அங்கிருந்த அத்தனைப்பேரில் ஒருவர்கூட அந்த இளைஞர் பேசுவது தவறென்று அவரை இடைநிறுத்தவில்லை. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் புயலை கிளப்பியது.

வெறும் 370 ரூபாய் பிரியாணிக்கு ஒரு பெண்ணின் சம்மதத்தையும், உடலையும் வாங்கிவிட முடியுமா என இணையவாசிகள் கடுமையாகச் சாடினர். மேலும் இது தவறு எனக்குறிப்பிட பெண்களின் ஒரு மாத நேப்கின் பயன்பாட்டு விலையே அந்த ரூ.370 தாண்டிதான் இருக்கும் என வீடியோக்கள் போடப்பட்டு வந்தன.

இது பேசிய ஹிமான்ஷு ஜங்ராவுடைய எண்ணம் மட்டும் இல்லை, அதை அங்கு அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த அனைவரின் எண்ண ஓட்டமும் அப்படிப்பட்டதுதான் என கடுமையாக விமர்சித்தனர்.

பொதுமக்களின் கடுமையான கண்டனங்கள் மற்றும் புகார்களைத் தொடர்ந்து, பிரணித் மோர் அந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து நீக்கினார். மேலும், தொடர்ந்து வந்த எதிர்மறை விமர்சனங்களைத் தாங்க முடியாமல் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை தற்காலிகமாக முடக்கியுள்ளார்.

இதனிடையே இந்த கருத்தை தெரிவித்த ஹிமான்ஷு ஜங்ரா, தான் வேலை செய்த நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.