இந்தியா

‘கட்சி பேதமின்றி, மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசியல் செய்யும்’ - கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார்

இனி இந்த விவகாரம் மத்திய அரசின் கையில்தான் உள்ளது.

மேகதாது அணை விவகாரம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு இடையே நீண்டநாட்களாகவே பெரும் பிரச்னையாக இருந்துவருகிறது. கர்நாடகா, அணை கட்டுவதில் உறுதியாக இருந்துவரும் நிலையில் தமிழ்நாட்டின் முந்தைய திமுக மற்றும் அதிமுக அரசுகளும் அதனை கடுமையாக எதிர்த்து வந்தது.

தற்போது விஜய் தலைமையிலான தவெக புதிதாக பொறுப்பேற்றுள்ளது. தவெக அரசு பொறுப்பேற்ற உடனேயே மேகதாது விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளது கர்நாடகா. இதனால் இந்த விவகாரத்தில் விஜய்யின் நடவடிக்கை மிக முக்கியமானதாக அமையும்.

இந்நிலையில் எந்த கட்சியாக இருந்தாலும் மேகதாது விஷயத்தில் தமிழ்நாட்டின் அரசியல் தொடரும் என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,

“கட்சி பேதமின்றி, தமிழ்நாடு அதன் அரசியலைச் செய்யும். அவர்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று மறுஆய்வு கோரியுள்ளனர், நீதிமன்றமும் தனது தீர்ப்பை வழங்கி மேல்முறையீட்டை நிராகரித்துவிட்டது. நாங்கள் எங்கள் வேலையைச் செய்வோம். அவர்கள் அவர்களின் வேலையைச் செய்யட்டும்.

அவர்கள் கடந்த 40-50 ஆண்டுகளாக இதை எதிர்த்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. தற்போது நாங்கள் எங்கள் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துவிட்டோம், இனி இந்த விவகாரம் மத்திய அரசின் கையில்தான் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.