ஓடும் ரயிலில் பூஜை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் நிலையில் அதற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஓடும் ரெயிலின் உள்ளே தரையில் அமர்ந்து பூசாரி ஒருவர் பஜனை பாடல்களுடன் பூஜைகளை மேற்கொள்கிறார்.
வெள்ளை நிற உடை அணிந்த பக்தர்களும் அந்தப் பூஜையில் கலந்துகொண்டு வழிபாட்டில் ஈடுபடுவது பதிவாகியிருந்தது.
இந்த வீடியோ சர்ச்சையானதை தொடர்ந்து, வடக்கு ரயில்வே தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இதற்கான விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
இந்த பூஜை பயணிகள் இருக்கும் ரெயிலின் பொதுப் பெட்டியின் உள்ளே நடைபெறவில்லை என்றும் இது ஐஆர்சிடிசி தளம் மூலம் ஒரு தனிநபரால் காசு கொடுத்துப் பதிவு செய்யப்பட்ட சலூன் கார் எனப்படும் தனிப்பட்ட சொகுசுப் பெட்டி என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில்வேயின் சலூன் கார் என்பது பொதுவாக விஐபிக்கள் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சொகுசு ரயில் பெட்டியாகும்.
இதில் குளிரூட்டப்பட்ட படுக்கையறைகள், சிறிய சமையலறை, ஓய்வறை மற்றும் டைனிங் ஹால், தனிப்பட்ட கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து ஒரு வீட்டில் இருக்கும் அனைத்து வசதிகளும் அடங்கியிருக்கும்.
இந்தத் தனிப் பெட்டியைப் பொதுமக்களும் கட்டணம் செலுத்திப் புக் செய்துகொள்ளலாம்.
கடந்த ஜூலை 8 அன்று ஐஆர்சிடிசி மூலம் இந்தச் சலூன் கார் பதிவு செய்யப்பட்டதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதற்காகச் சம்பந்தப்பட்ட நபர் ரூ. 3,08,580 முன்பணமாக ரெயில்வேக்கு செலுத்தியுள்ளார்.
இந்த சொகுசுப் பெட்டியானது, கடந்த ஜூலை 10 அன்று டெல்லியிலிருந்து மும்பைக்குச் சென்ற பஸ்சிம் எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் ஒருவழிப் பயணத்திற்காக இணைக்கப்பட்டிருந்தது.
தனி நபர் ஒருவரால் முழு கட்டணமும் செலுத்தப்பட்டுப் புக் செய்யப்பட்ட சொகுசுப் பெட்டி என்பதால், அதில் தங்களின் தனிப்பட்ட மத வழிபாடுகளை அவர்கள் நடத்தியதில் எவ்வித விதிமீறலும் இல்லை என ரெயில்வே சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
முன்னதாக புதுமண தம்பதிகளின் தேனிலவுக்கு ஏற்றாற்போல ஓடும் ரெயிலில் ஒரு கோச்சில் அலங்கரிக்கப்பட்டுருந்த வீடியோ வைரலான நிலையில் இந்த சலூன் கோச் வீடியோ சர்ச்சை எழுந்து அடங்கியுள்ளது.