அணு ஆயுத போட்டி காரணமாக அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதை அடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது.
இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மேலும் எரிபொருள் தட்டுப்பாடு சூழலும் உருவாகி இருக்கிறது. பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்ந்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தவில்லை.
மேலும், பெட்ரோல்-டீசல் மீதான சுங்க வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் குறித்தும், சாமானிய மக்களுக்கான உணவு, எரிசக்தி மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளின் இருப்பு தொடர்பாகவும் பிரதமர் மோடி தலைமையில் இன்று மூத்த மந்திரிகள் குழுவுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மேற்காசிய போர் காரணமாக இந்தியாவில் பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் எடுக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும், அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெடுப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளப் பதிவில், "பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு (CCS) கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். மேற்கு ஆசியாவில் தற்போது நடைபெற்று வரும் போரின் பின்னணியில், பல்வேறு அமைச்சகங்களும், துறைகளும் எடுத்து வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ததுடன், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெடுப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
எரிசக்தி, விவசாயம், உரங்கள், விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் போன்ற துறைகள் தொடர்பான அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன," என்று குறிப்பிட்டுள்ளார்.