உத்தரகாண்டில் உள்ள ஒரு வீட்டில் ஐபோனை திருடி சென்ற நபர் ஒருவர், வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டு தான் திருடி சென்ற ஐபோனின் பாஸ்வேர்ட்டை கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்டில் உள்ள டேராடூனில் கெளஷிகி தியானி என்ற இளம்பெண் ஐடி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கிளமென்ட் டவுனில் உள்ள வீட்டில் தனது சகோதரருடன் வசித்து வந்துள்ளார்.
இவரின் வீட்டிற்கு செப்டம்பர் 12 அன்று இரவு நேரத்தில் வந்த திருடன் ஒருவன், அங்கிருந்த ஐபோன், லட்சக்கணக்கான மதிப்புள்ள மடிக்கணினிகள், மேக்புக்குகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்றுள்ளார்.
இதையடுத்து தனது வீட்டில் இருந்த ஐபோன் மற்றும் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக கிளமென்ட் டவுனில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து ஐடி ஊழியர் அளித்த புகாரை தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல், காவல்துறையினர் காலம் கடத்தி வந்துள்ளனர். மேலும் அவர் அளித்த புகாரை ஏற்றுக்கொள்வதற்கும் காவல்துறையினர் மறுத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஐபோனை திருடி சென்ற திருடன், ஐடி ஊழியரை தொடர்பு கொண்டு ஐபோனின் பாஸ்வேர்டை கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்காமல் இளம்பெண் மறுத்து வந்ததால், அந்த திருடன் மீண்டும் மீண்டும் போன் செய்து பாஸ்வேர்டை கேட்டுள்ளார்.
இதையடுத்து காவல் நிலையத்திற்கு சென்ற இளம்பெண், திருடன் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பிய செய்திகளின் ஸ்கிரீன்ஷாட்டுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் புகைப்படங்கள் ஆகியவற்றை காட்டினார்.
டிஐடி பல்கலைக்கழகம் மற்றும் கிராஃபிக் எரா பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை தான் பெற்றுள்ளதாக அவர் காவல் நிலையத்தில் கூறினார்.
மேலும் தன்னிடம் இருந்து திருடப்பட்ட ஐபோனில் காண்பிக்கப்பட்ட மாற்று தொடர்பு எண் (emergency number) மூலம், அந்த திருடன் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பியதையும் இளம்பெண் காவல் நிலையத்தில் காண்பித்தார்.
உத்தரகாண்ட் காவல்துறையால் தன்னை பிடிக்க முடியாது என்ற துணிவில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பி தொடர்புகொண்டதாகவும் இளம்பெண் குற்றம்சாட்டினார்.
மேலும் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் தனது வீட்டிற்கு அருகிலுள்ள சில விடுதிகளில் மற்றும் தங்குமிடங்களில் நிழந்துள்ளதாகவும் இளம்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.