இந்தியா

இம்ரான் கானை நாட்டைவிட்டு வெளியேறக்கூறிய உத்தரவுக்கு இடைக்கால தடை!

அக்.28ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

பாலிவுட் நடிகர் இம்ரான் கான் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு, நவம்பர் 2-ஆம் தேதி வரை இடைக்கால தடைவிதித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி, அக்டோபர் 10ம் தேதி மும்பை அகஸ்தி கிராந்தி மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் இம்ரான் கான், அவரது மனைவி லேகா வாஷிங்டன், அவரது தாயார் நுஸ்ஹத், அவரது உறவினர் ஜெய்ன் மேரி ஆகியோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்தநிலையில், அமெரிக்க குடியுரிமை வைத்திருக்கும் இவர் எப்படி இந்திய நாட்டுப் போராட்டங்களில் பங்கேற்கலாம் எனக்கூறி, அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக தலைவர் கிரீட் சோமையா கோரினார்.

இவரின் புகாரைத் தொடர்ந்து, வெளிநாட்டினர் இந்திய அரசியல் அல்லது போராட்டங்களில் ஈடுபடுவது விசா மற்றும் குடியேற்ற விதிகளுக்கு எதிரானது என்று கூறி, மும்பை வெளிநாட்டினர் பிராந்தியப் பதிவு அலுவலகம் இம்ரான் கானை நாட்டை விட்டு வெளியேறக் கோரி நோட்டீஸ் அனுப்பியது.

இந்த உத்தரவை எதிர்த்து இம்ரான் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், தாம் 2025-ஆம் ஆண்டின் குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தையோ அல்லது குடியுரிமைச் சட்டத்தையோ மீறவில்லை என்றும், தாம் மீறியதாகக் கூறப்படும் சட்டப்பிரிவை அந்த அறிவிப்பில் குறிப்பிடவில்லை என்றும் கூறியிருந்தார்.

மேலும் தான் சம்பவ இடத்திற்குச் சென்றபோது எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை என்றும், போராட்டத் களத்திற்குள் நுழைவதற்காகக் காவல்துறைத் தடுப்புகளைத் தாண்டவில்லை என்றும் கூறினார்.

ஒரு OCI அட்டைதாரர் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை என்றும், எந்தவொரு விளக்கக் கடிதமும் கேட்காமலும், முறையான விசாரணை நடத்தாமலும் தன்னிச்சையாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவரது தரப்பில் வாதிடப்பட்டது.

இதனிடையே மத்திய அரசு சார்பில் இந்த வழக்கில் சொசிலிட்டர் ஜெனரல் ஆஜராக கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணை நவ.2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதுவரை இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேறும்படி கேட்கப்படமாட்டார் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

SCROLL FOR NEXT