ரெயில் நிலைய கவுண்டரில் பயணசீட்டு முன்பதிவு செய்வோருக்கும் இன்று முதல் காப்பீடு வழங்கப்படுகிறது.
ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைனில் பயணச்சீட்டு முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த டிராவல் இன்சூரன்ஸ், இன்று முதல் (அக்டோபர் 27) ரெயில் நிலைய கவுன்டரில் வாங்கப்படும் பயணச்சீட்டுகளுக்கும் வழங்கப்படும்.
முன்பதிவுப் படிவத்தில் காப்பீட்டு விருப்பத்தை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு பகுதியில் கூறப்பட்டிருக்கும். விருப்பமுள்ள பயணிகள் படிவத்தில் உள்ள கட்டத்தில் தங்கள் சம்மதத்தைத் தெரிவிக்க வேண்டும்.
காப்பீடு தொடர்பான துல்லியமான தகவல்களை பெறுவதற்கு, பயணிகள் படிவத்தில் தங்கள் கைபேசி எண்ணையும் சேர்க்க வேண்டும். காப்பீட்டிற்கு கட்டணமும் வசூலிக்கப்படும்.
பயண தூரம் எதுவாக இருந்தாலும், எந்த வகுப்பு முன்பதிவு பெட்டியாக இருந்தாலும் அனைத்திற்கும் பொதுவாக காப்பீட்டுத் தொகை 45 பைசா. இந்த பாலிசியை எடுப்பது பயணிகள் விருப்பத்தேர்வு ஆகும்.
இதன்படி ரெயில் பயணத்தின் போது ஏதேனும் எதிர்பாராத விபத்து ஏற்பட்டால், அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.
விபத்தினால் மரணமோ அல்லது நிரந்தர முழு உடல் ஊனமுற்றால் ரூ.10 லட்சம், நிரந்தர பகுதி உடல் ஊனமடைந்தால் ரூ.7.50 லட்சம், காயங்களுக்கான மருத்துவமனை செலவுகள் ரூ. 2 லட்சம் வரையும், உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல ரூ. 10 ஆயிரம் என இழப்பீடு பெற முடியும்.
ரெயில் நிலைய கவுண்டர்கள் மூலம் நேரடியாக டிக்கெட் முன்பதிவு செய்யும் சாதாரண பயணிகளுக்கு சமமான பாதுகாப்பை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் ரெயில்வே அமைச்சகத்துக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து இது அமல்படுத்தப்பட்டுள்ளது.
பயணச்சீட்டுகளை ஆன்லைனில் அல்லது ஆப்லைனில் வாங்கும் முறையின் அடிப்படையில், பயணிகளின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் வித்தியாசமாக மதிப்பளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பின்போது குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.