பிரபல பாலிவுட் நடிகையும், 2016 அழகிப் போட்டியின் ரன்னர் - அப்புமான லோபாமுத்ரா ராவத் என்பவரின் மும்பை வீட்டில் புகுந்து ரூ. 1 கோடி பாதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்த சந்தன் முகியா (26) என்ற வாலிபர் பீகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பிடிபட்ட நபர், முன்பு போலீசாருக்கு தூது கொடுக்கும் 'இன்ஃபார்மராக' இருந்து கொண்டே, இப்போது திருட்டு தொழிலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தன் முகியாவின் கடந்த காலப் பின்னணி போலீசாரையே தலைசுற்ற வைத்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் மும்பை காம்தேவி பகுதி போலீசார் ஒரு திருட்டு வழக்கை விசாரித்தபோது, அவர்களுக்கு இன்ஃபார்மராக இருந்து சந்தன் முகியா உதவினார்.
இது போன்ற பல சமயங்களில் போலீசாருக்கு உதவி செய்ததால் சந்தனை போலீசார் கூடவே வைத்துக்கொண்டனர்.
அப்போது போலீசாருக்கு நெருக்கமாக இருந்த சந்தன், போலீஸ் எப்படி ஆதாரம் திரட்டுகிறது? சிசிடிவி-யை எப்படி ஆய்வு செய்கிறது? குற்றவாளிகளை எப்படி டிராக் செய்கிறது? போன்ற அத்தனை ரகசியங்களையும் உன்னிப்பாகக் கவனித்து, அப்படியே தனக்கான திருட்டுப் பாடமாகக் கற்றுக்கொண்டுள்ளார்.
இதன் பிறகு, அதே 2021-ல் தனது முதலாளியான வைர வியாபாரி வீட்டில் ரூ.1.8 கோடியைச் சுருட்டினார். பின்னர் 2025-ல் மற்றொரு திருட்டு வழக்கில் கைதாகி, இந்த ஆண்டு ஜனவரியில் தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
ஜாமீனில் வந்த பிறகு மும்பை சென்ட்ரல் பகுதியில் தங்கியிருந்தபடி, நகரின் முக்கிய இடங்களை நோட்டமிட்டுள்ளார்.
அப்போது சாந்தாகுரூஸ் பகுதியில் உள்ள நடிகையின் வீட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் பழுதுபார்க்கும் பணிகளுக்காக மூங்கில் சாரம் கட்டப்பட்டிருப்பதை கவனித்துள்ளார்.
கடந்த ஜூலை 14 அன்று அதிகாலை 4 முதல் 5 மணிக்குள், அந்த மூங்கில் சாரம் வழியாக ஏறி, 5-வது மாடியில் உள்ள நடிகையின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
உள்ளே ஒரு மணி நேரம் நிதானமாகத் தேடி, ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், விலை உயர்ந்த வாட்ச்கள் மற்றும் ரொக்கப் பணத்தை அள்ளிக்கொண்டு தப்பியுள்ளார். சிசிடிவி கேமராவில் ஒரே ஒரு பிரேமில் மட்டுமே முகம் தெரியும்படி மிக சாமர்த்தியமாக தப்பியோடியுள்ளார்.
சொந்த ஊரான நாக்பூருக்குச் சென்றிருந்த நடிகை, ஜூலை 27 அன்று மும்பை திரும்பியபோது வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தார். கட்டிட ஊழியர் ஒருவர் பால்கனி வழியாக உள்ளே சென்று கதவைத் திறந்தபோது தான் கொள்ளை போனது தெரிந்தது.
மேற்கு மண்டல டிசிபி மோஹித் கார்க் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி மற்றும் நெட்வொர்க் டிராக்கிங் மூலம் குற்றவாளி சந்தன் முகியா என அடையாளம் காணப்பட்டனர்.
அவர் கொள்ளையடித்த உடனே ரெயிலில் ஏறி இந்தியா-நேபாள எல்லைக்கு அருகில் உள்ள பீகார் தர்பங்கா கிராமத்திற்கு ஓடியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு விரைந்த போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தன் முகியாவிடமிருந்து ரூ.76.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், கொள்ளையடித்த வெறும் 10 நாட்களுக்குள், சந்தன் மற்றும் அவரது மாமா லாலு முகியா ஆகியோர் திருட்டுப் பணத்தில் ரூ.22 லட்சத்தை முதலீடு செய்து, தங்கள் கிராமத்திற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கும் இடம் உட்பட இரண்டு நிலங்களை வாங்கிய அதிர்ச்சித் தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீஸ் அதிகாரி கூறுகையில், "இவனது ஒட்டுமொத்த குடும்பமுமே வீட்டு வேலைக்குச் சேர்ந்து திருடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஆட்களை வேலைக்கு வைப்பதற்கு முன்பு அவர்களின் பின்னணியை முழுமையாகச் சரிபார்க்க வேண்டும்" என எச்சரித்துள்ளார்.