ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த குடியிருப்பு பகுதியை கைப்பற்றியுள்ள தேசிய புலனாய்வு முகமை, அதனை லஷ்கர்-இ-தொய்பா பயன்படுத்தாதபடி முடக்கியுள்ளதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் அடுத்த ஸ்ரீநகரில் உள்ள தானிஹாமா பகுதியில் குலாம் முகமது மிர் என்பவர் தனது சொந்த குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார்.
இவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அபு ஹூரைரா மற்றும் குபைபு என்பவர்களுக்கு, தனது இல்லத்தில் அடைக்கலம் கொடுத்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் வழங்கி வந்துள்ளார்.
இதையடுத்து அவரது வீட்டில் புலனாய்வு படையினர் சோதனை மேற்கொண்ட போது, அங்கு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட சில பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து குலாம் முகமது-விடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்ரீநகர் மாவட்டத்தில் செயல்படும் பயங்கரவாதிகளின் ஊடுருவலை எளிதாக்கும் வகையில், அவர்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட ஆதரவுகளை வழங்கி வந்தது தெரியவந்தது.
மேலும் அவருக்கு, பாகிஸ்தானை தளமாக கொண்ட குழுக்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த ஜகூரா காவல் அதிகாரிகள், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வந்த குலாம் முகமது மிர் என்பவரின் வீட்டை கையகப்படுத்தினர்.
இதுகுறித்து பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், “பயங்கரவாதிகள் மட்டுமல்ல, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களின் நடமாட்டத்திற்கு வசதி செய்து கொடுப்பவர்களும் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்வார்கள்.
மேலும் அவர்கள் தங்களின் சொத்துக்களை இழக்க நேரிடும்.
பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றுவதற்காக, லஷ்கர் பயங்கரவாதிகளான அபு ஹுரைரா, குவைப் மற்றும் பிறர் இந்த வீட்டை அடிக்கடி பாதுகாப்பான புகலிடமாக பயன்படுத்தி வந்துள்ளனர்” என்று கூறினார்.