இந்தியா

முன்பதிவு ரூ.1 லட்சம், பிடித்தம் 40,000: இண்டிகோ நிறுவனத்தை சாடிய பயணி

மும்பையில் இருந்து பாலி செல்வதற்காக கனிகா என்பவர் பயணக் கட்டணத்தை ஆன்லைன் இணையதளம் மூலம் செலுத்தியுள்ளார்.

இண்டிகோவில் முன்பதிவு செய்த கனிகா மோகன்:

மும்பையை சேர்ந்த கனிகா மோகன் சக்சேனா, மும்பையில் இருந்து இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவிற்கு செல்வதற்காக இண்டிகோ விமான நிறுவனத்தில் ஆன்லைன் இணையதளம் மூலம் முன்பதிவு பயணச்சீட்டு கட்டணத்தை செலுத்தினார்.

இதையடுத்து இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், பயணத்திட்டத்திற்கு பதிலாக 18 மணி நேர இடை நிறுத்தத்துடன் கூடிய மாற்று ஏற்பாடு ஒன்று வழங்கப்பட்டு இருப்பதாகவும் விமான நிறுவனத்திடம் இருந்து அப்பெண்ணிற்கு குறுஞ்செய்தி வந்தது.

இதைத்தொடர்ந்து மாற்று வழியில் பதிவு செய்த அவருக்கு, மாற்று விமானமும் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வந்தது.

பணத்தை திருப்பி செலுத்த கோரிக்கை:

இந்நிலையில் தான் மொத்தமாக செலுத்திய ரூ.1,02,928 பயணக் கட்டணத்தை திருப்பி தருமாறு(refund) வாடிக்கையாளர் சேவையை அவர் தொடர்பு கொண்டார்.

அப்போது அவரின் வங்கி கணக்கிற்கு ரூ.67,334 மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் ரூ.27,996 கட்டணத்தை இண்டிகோ நிறுவனமும், ரூ.7,500 கட்டணத்தை ஆன்லைன் இணையதள நிறுவனமும், ரூ.2,000 கட்டணத்தை இதரக் கட்டணங்களாகவும், மொத்தம் ரூ.40,000 பிடித்தம் செய்யப்பட்டது.

சமூக வலைதளத்தில் குமுறல்:

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், “இண்டிகோவிடம் கேட்டால் ஆன்லைன் இணையதளத்தை குறிப்பிடுகிறது. அவர்களிடம் கேட்டால் இண்டிகோவிடம் பேச சொல்கிறது. சத்தியமாக இனி ஒருபோதும் உங்கள் சேவையை பயன்படுத்த மாட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இண்டிகோ சேவை விளக்கம்:

இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள இண்டிகோ நிறுவனம், “திருமதி சக்சேனா, உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணில் உங்களைத் தொடர்புகொள்ள முயன்றோம், ஆனால் முடியவில்லை.

சமீபத்திய தகவலின்படி, சம்பந்தப்பட்ட PNR எண்ணுக்கு முழுப் பணமும் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. பணத்தைத் திரும்பப் பெற, உங்கள் முன்பதிவு செய்த நிறுவனம்/முகவரைத் தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம், மேலும் எதிர்காலத்தில் உங்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவோம் என நம்புகிறோம்," என்று தெரிவித்தது.