மும்பை விமான நிலையத்தில் இருந்து, தங்களது விமான சேவைகளை நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு படிப்படியாக மாற்ற உள்ளதாக இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1 (டெர்மினல் 1) மறுசீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட உள்ளதால், அதானி ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ், இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
இந்த இடமாற்றம் 2027 பிப்ரவரி முதல் ஜூலை மாதத்திற்குள் படிப்படியாக நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனம் பிப்ரவரி முதல் தனது 12 தினசரி சர்வதேச விமானங்களை நவி மும்பை விமான நிலையத்திற்கு மாற்றத் திட்டமிட்டுள்ளது .
பஹ்ரைன், ரியாத், தம்மம், ஜித்தா, மெதினா, குவைத், ராஸ் அல் கைமா, புஜைரா, மஸ்கட், டாக்கா மற்றும் ஜகார்த்தா ஆகிய 11 நகரங்களுக்கான தற்போதைய சேவைகள் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் காத்மாண்டு நகருக்கு நவி மும்பையிலிருந்து ஒரு புதிய தினசரி சர்வதேச சேவையும் தொடங்கப்பட உள்ளது.
சர்வதேசப் பயணிகளுக்கான இணைப்பு விமானங்களை வழங்குவதற்காக, சில உள்நாட்டு விமானங்களும் மாற்றியமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மும்பை பழைய விமான நிலையத்தில் இடவசதி கிடைப்பதால், இண்டிகோ தனது புதிய A321XLR ரக விமானங்களை வைத்து ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு 2027-ல் புதிய சேவைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.