கோப்புப் படம்  
இந்தியா

ஐரோப்பாவில் கேஷியர் வேலை.. ரூ.11 லட்சம் வாங்கிக்கொண்டு இந்திய பெண்ணை மதுக்கடை முதலாளியிடம் விற்ற வேலைவாய்ப்பு ஏஜென்சி

ரூ. 11 லட்சத்தை இந்தியாவிலேயே வைத்து அந்த வேலைவாய்ப்பு ஏஜென்சி கட்டணமாக பெற்றுள்ளது.

ஐரோப்பிய நாட்டில் மாதம் ரூ. 1.5 லட்சம் சம்பளத்தில் சூப்பர் மார்க்கெட் கேஷியர் வேலை வாங்கி தருவதாகக் கூறி இந்திய பெண் ஒருவர் விற்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடத்தல்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த அந்த 28 வயது பெண்ணை புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு தனியார் வேலைவாய்ப்பு ஏஜென்சி போர்ச்சுகல் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.

பெண்ணிடம் ரூ. 11 லட்சத்தை இந்தியாவிலேயே வைத்து அந்த வேலைவாய்ப்பு ஏஜென்சி கட்டணமாக பெற்றுள்ளது.

போர்த்துகல் சென்றடைந்ததும், அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த கும்பல், அவரை அங்கிருந்த ஒரு பீர் மதுபானக் கடை உரிமையாளரிடம் விற்றுள்ளது.

கட்டாய வேலை

அங்கு அப்பெண்ணைப் பலவந்தப்படுத்தி வேலை செய்ய வைத்து, உடலளவிலான மற்றும் மனதளவிலான சித்ரவதைகளுக்கு ஆளாக்கியுள்ளனர்.

தனது பாஸ்போர்ட்டைத் திரும்பக் கேட்டபோது, அக்கும்பல் மேலும் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளது.

மிரட்டல்

ஒருவழியாக இந்தியா திரும்பிய பிறகும், அக்கும்பல் அப்பெண்ணின் கணவரைத் தொடர்புகொண்டு வேறு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மேலும் ரூ. 3 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளது.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண், புனே குற்றப்பிரிவுகாவல்துறையை அணுகிப் புகார் அளித்தார்.

அவரது புகாரின் பேரில், மனிதக் கடத்தல், மோசடி மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புனே மற்றும் போர்ச்சுகலை சேர்ந்த 7 நபர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.