இந்தியா

பயணிகள் கவனத்திற்கு... ரெயில்களில் நடுப்படுக்கையில் எப்போது தூங்க வேண்டும் தெரியுமா?

சில பயணிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தூங்க முயலும்போது, பயணிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படும்.

இந்திய ரெயில்வேயில் இயங்கும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 3 அடுக்கு படுக்கை வசதி கொண்ட ரெயில் பெட்டிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதில் கீழ் படுக்கையை மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், உடல் நிலை சரியில்லாதவர்கள் அதிகமாக பயன்படுத்துவார்கள். மேல் படுக்கையை இளைஞர்கள், சிறுவர்கள் பயன்படுத்துவார்கள். நடுப்படுக்கையை அனைத்து வகை மக்களும் உபயோகப்படுத்துகின்றனர். இந்த நடுப்படுக்கையை (மிடில் பெர்த்) பயன்படுத்தும் பயணிகளால் பல்வேறு பிரச்சனைகள் ரெயில்களில் நிகழும்.

அதில் தூங்குவதற்கு பயன்படுத்துவதாலேயே அதிக அளவு பிரச்சனை ஏற்படும். இதுபோன்ற பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பயணிகள் இருக்கை தொடர்பாக ரெயில்வே வாரியம் ஏற்கனவே விதிமுறையை உருவாக்கியுள்ளது. அந்த விதிமுறையில் பயணிகள் படுக்கைகளை எப்போது பயன்படுத்தலாம்? என்பது குறித்து விளக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதுகுறித்து பல பயணிகளுக்கு தெரிவதே இல்லை. அதன் விவரம் வருமாறு:-

முன்பதிவு செய்த ரெயில் பெட்டிகளில் நடுப்படுக்கையை பயன்படுத்தும் பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் உறங்குவதற்கு பயன்படுத்தலாம். குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இருக்கை வசதியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த விதியில் இருந்து சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் தூங்க விரும்பினால் டிக்கெட் பரிசோதகரிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம். மேலும், கீழ் இருக்கையில் உள்ள சக பயணியின் ஒப்புதல் அளித்தால் நேர வரம்பை நீட்டித்து கொள்ளலாம்.

சில பயணிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தூங்க முயலும்போது, பயணிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படும். இதுபோன்ற நேரங்களில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் இதற்கு தீர்வு அளிப்பார்கள். இதேபோல, மேல் படுக்கையில் தூங்குவதற்கு எந்த நேர வரம்பும் கிடையாது. நடுப்படுக்கையை முன்பதிவு செய்தவர்கள் கண்டிப்பாக ரெயில்வே விதிகளை பின்பற்ற வேண்டும். இந்த விதிமுறைகளை முறையாக தெரிந்துகொண்டு பயணிகள் ரெயில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என தெற்கு ரெயில்வே சார்பில் சமூக வலைதள பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT