இந்தியப் பத்திரிகை புகைப்படக் கலையின் பிதாமகன் என்று போற்றப்படும் ரகு ராய் காலமானார். அவருக்கு வயது 83.
கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புற்றுநோய் மற்றும் வயது முதிர்வு தொடர்பான பிரச்சினைகளுக்காக ரகு ராய் சிகிச்சை எடுத்து வந்தார்.
இந்நிலையில் இன்று டெல்லியில் தனியார் மருத்துவமனையில் அவர் காலமான செய்தியை அவரது மகனும் புகைப்படக் கலைஞருமான நிதின் ராய் உறுதிப்படுத்தியுள்ளார்.
1942ல் பஞ்சாபில் (தற்போது பாகிஸ்தான்- பஞ்சாப்) பிறந்த ராய். 1965ல் 'தி ஸ்டேட்ஸ்மேன்' பத்திரிகையில் புகைப்பட கலைஞராக தனது பயணத்தைத் தொடங்கினார்.
1968ல் ரிஷிகேஷிற்கு வந்த புகழ்பெற்ற The Beatles இசைக்குழுவை அவர் எடுத்த புகைப்படங்கள் அவருக்கு உலகளாவிய புகழைத் தேடித்தந்தன.
உலகப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ஹென்றி கார்டியர் பிரெஸனின் பரிந்துரையின் பேரில், 1977ல் மதிப்புமிக்கMagnum Photos அமைப்பில் உறுப்பினரானார்.
1984ல் நடந்த போபால் விஷவாயு கசிவு துயரத்தின் கோர முகத்தை உலகுக்குக் காட்டியதில் ரகு ராயின் புகைப்படங்களுக்குப் பெரும் பங்கு உண்டு.
இதனைத் தொகுத்து அவர் வெளியிட்ட "Exposure: A Corporate Crime" புத்தகம் மிகவும் கவனிக்கப்பட்டது.
இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் 18க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
1971ல் நடந்த வங்கதேசப் போரைத் துணிச்சலுடன் பதிவு செய்ததற்காக, 1972ம் ஆண்டே இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
வெறுமனே படங்களை எடுப்பவராக இல்லாமல், அப்படங்களின் வழியே ஒரு கதையையும், காலத்தின் வலியையும் பதிவு செய்த அந்த மகா கலைஞனின் மறைவு புகைப்படத் துறையில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.