இந்தியா

குஜராத்: பயிற்சியின்போது விபத்தில் சிக்கிய இந்திய கடற்படையின் ஆளில்லா விமானம்

இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமான வகை (UAV) டிரோன் ஆகும்.

குஜராத்தின் போர்பந்தரில் இந்திய கடற்படையின் ஆளில்லா விமானம் பயிற்சியின்போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்திய கடற்படையின் தகவல்படி, விபத்துக்குள்ளான ஆளில்லா விமானம் (டிரோன்) அண்மையில் கடற்படையில் இணைக்கப்பட்ட அதிநவீன Drishti-10 Starliner ரக டிரோன் ஆகும்.

நேற்று வழக்கமான பயிற்சிக்காக போர்பந்தர் விமான ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டபோது டிரோன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரம்பூர் கிராமத்தின் அருகே உள்ள நேஷ் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

டிரோன் விழுந்தபோது ஏற்பட்ட பயங்கர சத்தத்தைக் கேட்டு அப்பகுதி கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

இந்திய கடற்படையின் தொழில்நுட்ப வல்லுநர்கள், உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து அந்தப் பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விசாரணை

அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்தத் திருஷ்டி-10 டிரோன் விபத்துக்குள்ளானது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து இந்திய கடற்படை அதிகாரிகள் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமா, திடீர் வானிலை மாற்றமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து கடற்படையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் டிரோனின் சிதைந்த பாகங்களை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

திரிஷ்டி-10

Drishti-10 Starliner, இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட MALE (Medium Altitude Long Endurance) ஆளில்லா விமான வகை (UAV) டிரோன் ஆகும்.

இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பத்துடன் அதானி டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் ஐதராபாத்தில் 70% உள்நாட்டு உதிரிபாகங்களை கொண்டு இந்த டிரோன்கள் தயாரிக்கப்படுகிறது.

இது இந்திய ராணுவத்தின் உளவு மற்றும் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்திய கடற்படை மற்றும் தரைப்படையின் எல்லைக் கண்காணிப்புப் பணிகளுக்காக இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

2024 ஜனவரியில் இந்த டிரோன் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டு இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது .

திறன்கள்

இது தரைக்குத் திரும்பாமல் தொடர்ந்து 36 மணிநேரங்கள் விண்ணில் பறக்கும் திறன் கொண்டது.

இந்த டிரோன் அதிகபட்சமாக 450 கிலோ எடையை சுமந்து செல்லவல்லது.

அனைத்து வகையான வானிலையிலும் துல்லியமாக செயல்பட்டு, தகவல்களை வழங்கும் திறன் கொண்டது.