இந்தியா

ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல் மீதான தாக்குதல்: இந்தியர் ஒருவர் மாயம்

மீட்பு பணிகளில் ஓமன் அரசாங்கம் வழங்கிய உடனடி உதவியையும் ஆதரவையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

ஹார்முஸ் ஜலசந்தியில் பனாமா கொடியுடன் பயணித்த வணிக கப்பல் ஒன்றின் மீது இந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில், இந்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளார்; மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவு துறை அமைச்சகம் (MEA) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 'எம்டி தாரா கேஸ்' என்ற கப்பலில் இருந்த 24 இந்தியர்களில், 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தியா கண்டனம்:

"நவம்பர் 16 அன்று ஹார்முஸ் ஜலசந்தியில், பனாமா கொடியுடன் பயணித்த 'எம்டி தாரா கேஸ்' எனும் எல்.பி.ஜி. டேங்கர் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம்" என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வணிக கப்பல்கள் மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளை இலக்கு வைக்கும் செயல்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

"கப்பலில் இருந்த 24 இந்தியர்களில், 21 பேர் கசாப் பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர். காயமடைந்த இரு இந்தியக் கப்பல் பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இந்தியர் இன்னும் காணவில்லை" என்று அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா வலியுறுத்தல்:

ஓமனில் உள்ள இந்திய தூதரகம், ஓமன் நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து, அங்கு நடைபெற்று வரும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. "மீட்புப் பணிகளில் ஓமன் அரசாங்கம் வழங்கிய உடனடி உதவியையும் ஆதரவையும் நாங்கள் பாராட்டுகிறோம்" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பிராந்தியத்தில் கப்பல்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் மிகுந்த கவலையளிப்பதாகவும், இவை பொதுமக்களான கப்பல் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

"வணிக கப்பல்கள் மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளை இலக்கு வைக்கும் செயல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு, சர்வதேச நீர்வழிகள் வழியாக எவ்வித தடையுமின்றி கப்பல் போக்குவரத்தும் வணிகமும் நடைபெறுவதை விரைவில் உறுதி செய்ய வேண்டும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT