இந்திய எரிவாயு கப்பலான திஷா ஹார்முஸ் நீரிணையைக் கடந்து வந்துகொண்டிருப்பதாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய கப்பல் கூட்டமைப்பால் நிர்வகிக்கப்படும் திஷா என்கிற எல்.என்.ஜி. எரிவாயு கப்பல், ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்து 62,370 மெட்ரிக் டன் எல்.என்.ஜி. எரிவாயுவுடன் இந்தியா வந்துகொண்டிருப்பதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகத்தின் இயக்குநர் ஓபேஷ் குமார் சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியா வந்துகொண்டிருக்கும் திஷா கப்பல் குஜராத்தின் தஹேஜ் துறைமுகத்தை வந்தடையும். பெரும்பாலும் வருகிற 18-ஆம் தேதியன்று கப்பல் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அமைச்சகம் வாயிலாக வெளியுறவு துறை, வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள், கப்பல் நிறுவனங்கள் மற்றும் பிற தரப்பினருடனும் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.
முன்னதாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் போர் நிறுத்தம் குறித்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது முதல் உலகளவில் ஹார்முஸ் நீரிணை முன்பு போல் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது போர் பதற்றம் குறைந்துள்ள நிலையில், இந்திய கப்பல் நீரிணையை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.