கருங்கடலில் உள்ள ரஷ்யாவின் கடல் எல்லை பகுதி வழியாக சென்று கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றின் மீது ஜூலை 18 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
உக்ரைன் கடற்கரைக்கு அப்பால் ஜூலை 19-ஆம் தேதியன்று வணிக கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும், அதில் நான்கு இந்தியர்கள் அடங்குவர் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்த சில நாட்களிலேயே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
"ஜூலை 18 அன்று, 'எம்வி ஓமோர்ஃபி' (MV OMORFI) என்ற வணிக கப்பல் கருங்கடலில் - ரஷ்யாவின் கடல் எல்லைப் பகுதிக்குள் - சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்ட தகவல் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தின்போது, கப்பலில் மூன்று இந்தியர்கள் உட்பட மொத்தம் 10 பணியாளர்கள் இருந்தனர்," என்று வெளியுறவு அமைச்சகம் கூறியது.
"கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, இத்தாக்குதலில் ஒரு இந்தியர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். கப்பலில் இருந்த மற்ற இரண்டு இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று அது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முயற்சித்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
"வணிகக் கப்பல்களைக் குறிவைப்பதையும், அப்பாவி பணியாளர்களின் உயிரை ஆபத்துக்குள்ளாக்குவதையும் இந்தியா உறுதியாக கண்டிக்கிறது. கடல்வழி போக்குவரத்து மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் சுதந்திரம் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது தீவிர கவலைக்குரிய விஷயமாகும்," என்று அது கூறியது.
"கடல்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய வர்த்தகத்தின் தடையற்ற ஓட்டத்தை உறுதி செய்வதற்கான சர்வதேச கடமைகளை நிறைவேற்றுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இந்தியா வலியுறுத்துகிறது," என்றும் வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்தது.
ஜூலை 19 அன்று 'எம்வி கோல்டன் லியோ' (MV Golden Leo) கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு ரஷ்யாவின் தூதரகப் பொறுப்பாளரைசெவ்வாய்க்கிழமை அன்று வரவழைத்து விளக்கம் கேட்டிருந்தது.