இந்தியா

இந்தியக் கல்விச் சூழல் 2026: நிதி ஆயோக் அறிக்கையின் அதிர்ச்சித் தகவல்கள்

அறிக்கையில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் ஓராசிரியர் பள்ளிகள் ஆகும்.

நாடு முழுவதும் ஓராசிரியர் பள்ளிகள் 1 லட்சம் உள்ளன என்று நிதி ஆயோக் தெரிவித்து உள்ளது.

"இந்தியாவில் பள்ளிக்கல்வி முறை” என்ற தலைப்பில் நிதி ஆயோக் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கை, பள்ளி உட்கட்டமைப்பு, பணியாளர்கள், மாணவர் சேர்க்கை மற்றும் கற்றல் குறிகாட்டிகள் குறித்த தேசிய மற்றும் மாநில அளவிலான தரவுகளைத் தொகுத்துள்ளது.

உட்கட்டமைப்பு பற்றிய அறிக்கையில், ஒட்டுமொத்த கழிப்பறை வசதி அதிகமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இருந்தாலும், 98,592 பள்ளிகளில் பெண்கள் கழிவறைகள் செயல்படும் நிலையில் இல்லை என்றும், 61,540 பள்ளிகளில் பயன்படுத்தக்கூடிய கழிப்பறைகளே இல்லை என்றும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

சுமார் 14,505 பள்ளிகளில் தண்ணீர் வசதி இல்லை என்றும், 59,829 பள்ளிகளில் கை கழுவும் வசதிகள் இல்லை என்றும் கூறப்பட்டு உள்ளது.

அதேநேரத்தில், கடந்த பத்தாண்டுகளில் பள்ளிகளுக்கான மின்சார வசதி 55 சதவீதத்தில் இருந்து 91.9 சதவீதமாக மேம்பட்டுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இருப்பினும், 1.19 லட்சம் பள்ளிகளில் இன்னும் மின்சார வசதி செயல்பாட்டில் இல்லை, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 51.7 சதவீதம் மட்டுமே அறிவியல் ஆய்வகங்களைக் கொண்டுள்ளன என்றும் அறிக்கை கூறுகிறது.

அறிக்கையில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் ஓராசிரியர் பள்ளிகள் ஆகும். நாட்டில் 1,04,125 பள்ளிகள் ஓராசிரியருடன் இயங்கி வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் சுமார் 89 சதவீதம் கிராமப்புறங்களில் அமைந்துள்ளன.

இந்தியாவில் தரமான கல்விக்கு தடையாக இருக்கும் மற்றொரு காரணி ஆசிரியர்களின் திறன் ஆகும். 2 சதவீத ஆசிரியர்களால் மட்டுமே கணிதத்தில் 70 சத வீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற வைக்கமுடிகிறது என்றும். சராசரி மதிப்பெண் 46 சதவீதமாக உள்ளது என்பதையும் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை, நாட்டில் சுமார் 7,993 பள்ளிகளில் மாணவர் சேர்க்கையே இல்லை. இத்தகைய பள்ளிகள் அதிகபட்சமாக மேற்கு வங் காளத்தில் உள்ளது. அங்கு 3,812 பள்ளிகளிலும், தெலுங்கானாவில் 2,245 பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை இல்லை.

இடைநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதத்தின் தேசிய சராசரி 11.5 சதவீதம் ஆகும். ஆனால் இதைவிட அதிகமாக மேற்கு வங்காளம் (20 சதவீதம்). அருணாசல பிரதேசம் (18.3 சதவீதம்), கர்நாடகா (18.3 சதவீதம்), அசாம் (17.5 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

மேலும், இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 4.6 சதவீதத்தை மட்டுமே கல்விக்காக செலவிடுகிறது என்றும், ஆனால் இது இங்கிலாந்து. அமெரிக்காவில் சுமார் 5.9 சதவீதமாகவும், ஜெர்மனி, பிரான்சில் சுமார் 5.4 சதவீதமாகவும் உள்ளது.