பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.
நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அவர் மாணவர்களுடன் உரையாடும்போது இந்தியா பொருளாதார பேரழிவை எதிர்கொள்வதாக தெரிவித்தார்.
இந்தநிலையில் இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பு முழுமையாக சிதைக்கப்பட்டு விட்டதாகவும், தேர்தல் முறையில் குறைபாடுகள் இருப்பதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
சிகாகோ பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடும்போது அவர் இதை தெரிவித்தார்.
இதுதொடர்பாக ராகுல்காந்தி பேசியதாவது:-
இந்திய ஜனநாயகம் புனிதமானது. இதில் ஏதோ சிக்கல் இருப்பதாக நான் கூறுவதற்கே 100, 200 அல்லது 300 சதவீத ஆதாரங்கள் தேவைப்படும். எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பது அந்த நொடியே ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வரும்.
எதிர்க்கட்சி தொண்டர்களிடம் நீங்கள் தேர்தலில் பங்கேற்க வேண்டாம் என்று சொன்னால் என்னவாகும்? நாங்கள் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று கூறினால் அந்த வினாடியே இந்திய ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என்று அர்த்தம்.
ஆனால் இந்திய ஜனநாயக கட்டமைப்பை நாங்கள் முடிவுக்கு கொண்டு வர விரும்பவில்லை. எனவே நாட்டில் என்ன நடக்கிறது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதும், இந்திய மக்கள் இந்த ஜனநாயக கட்டமைப்பு முழுமையாக சிதைக்கப்பட்டு விட்டது என்பதை உணரும் வரை தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும் அதை பொறுத்துக் கொள்வதுமே எங்கள் வியூகமாகும்.
தேர்தல் முறையில் குறைபாடு இருக்கிறது. தேர்தலை புறக்கணிப்பது இந்திய ஜனநாயகத்தின் முடிவுக்கு வழிவகுக்கும் என்றாலும் அத்தகைய செயலில் ஈடுபட காங்கிரஸ் கட்சிக்கு விருப்பமில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
ராகுல்காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.