இந்திய தொழிலதிபர் கொடுத்த 35,000 ரூபாய் கடனுக்கு 109 ஆண்டுகள் கழித்து பேரன்கள் கோரிக்கை 
இந்தியா

109 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து அரசுக்கு ரூ.35,000 கடன் வழங்கிய இந்தியர்: திருப்பி கேட்கும் பேரன்கள்..!

போபால் மாநிலத்தின் நிர்வாகத்தை சீரமைப்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் எங்கள் தாத்தாவிடம் பணத்தை கடனாகப் பெற்றது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் முதலாம் உலகப் போரின்போது, செலவுகளுக்காக பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ரூ.35,000 கடனாக வழங்கி ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நிலையில், அக்கடனைத் திருப்பிச் செலுத்திமாறு தொழிலதிபரின் பேரன்கள் இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் தங்களது கோரிக்கையை பரிசீலிக்க, இங்கிலாந்து அதிகாரிகள் பதிலளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

1937இல் இங்கிலாந்து வாங்கிய கடன்

செஹோர் நகரில் தொழிலதிபரின் வம்சாவளியினரான வினய் மற்றும் விவேக் ருத்தியா செய்தியார்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், “1937-ல் காலமான எங்கள் தாத்தா சேத் ஜும்மா லால் ருத்தியா விட்டுச்சென்ற ஆவணங்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களின் அடிப்படையில், எங்களது சட்ட ஆலோசகர் பிப்ரவரி மாதம் இங்கிலாந்து கடன் மேலாண்மை அலுவலகத்திற்கு ஒரு அறிவிப்பை அனுப்பினார்.

நாங்கள் அனுப்பிய கோரிக்கையை பரிசீலிக்க இங்கிலாந்து அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. முதலாம் உலகப் போரின்போது, ஏராளமான இந்திய வீரர்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்தனர்.

அப்போது உணவு, தண்ணீர் மற்றும் இதர போர் செலவுகளுக்கு நிதியளிப்பதற்காக அரசாங்கம் இந்தியாவிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாயைத் திரட்டியது.

அந்த நேரத்தில், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு 35,000 ரூபாயை எங்கள் தாத்தா கடனாக வழங்கினார். 109 ஆண்டுகள் பழமையான அந்த கடனுக்கான ஆவணங்கள் பதிவேடுகளில் கண்டெடுக்கப்பட்டு எங்களிடம் உள்ளது.

அந்த ஆவணத்தில், சேத் ஜும்மா லால் ருத்தியா, இந்திய போர் கடனுக்காக 35,000 ரூபாய் செலுத்தி, அதன் மூலம் அரசாங்கத்திற்கும் பேரரசிற்கும் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 4, 1917 தேதியிட்ட அந்த ஆவணத்தில், போபாலில் உள்ள ஒரு அரசியல் முகவரின் கையொப்பம் இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்திற்கு கடிதம்

இதையடுத்து எனது வழக்கறிஞர் ஸ்ரீயான்ஷ் ரணிவால் மூலம், இங்கிலாந்து அரசாங்கத்தின் கடன் மேலாண்மை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மற்றும் அச்சுப் பிரதி வழியாக ஒரு சட்டப்பூர்வ அறிவிப்பை அனுப்பினோம்.

சமீபத்தில், எனது வழக்கறிஞருக்கு இங்கிலாந்து கடன் மேலாண்மை அலுவலகத்திடமிருந்து ஒரு பதில் கிடைத்தது. அதில், உங்கள் கட்சிக்காரருக்கு உரிமை கோரப்படாத பணம் கிடைக்க உரிமை உண்டு என்று நீங்கள் நம்பினால், சம்பந்தப்பட்ட சொத்துப் பங்கீடு தொடர்பான உங்களிடம் உள்ள தகவல்களை அளித்து, அரசுப் பத்திரப் பதிவாளரான கம்ப்யூட்டர்ஷேர் இன்வெஸ்டர் சர்வீசஸ் பிஎல்சி-யைத் தொடர்பு கொள்ளும்படி பதில் அனுப்பியது.

மேலும் இந்த ஆவணங்களுடன் வேறு ஏதேனும் சான்றிதழ்கள் மற்றும் கடிதப் போக்குவரத்துகள் உள்ளிட்ட வேறு ஏதேனும் ஆவண சான்றுகளின் நகல்களை நீங்கள் வழங்கினால் அது உதவியாக இருக்கும்,” என்று இங்கிலாந்து அரசு எங்களுக்கு கடிதம் அனுப்பியது.

மேலும், “ஒரு நூற்றாண்டுக்கும் மேலான இதன் மதிப்பு, வட்டியையும் சேர்த்து, இன்று பல கோடிகளாக இருக்கும். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அந்த தொகையைக் கடனாக கொடுத்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 1937-ல் எனது தாத்தா சேத் ஜும்மா லால் இறந்துவிட்டார்.

கடனை திருப்பித் தர கோரிக்கை

போபால் மாநிலத்தின் நிர்வாகத்தை சீரமைப்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த பணத்தை எங்கள் தாத்தாவிடம் இருந்து கடனாகப் பெற்றது.

மேலும், சர்வதேச சட்டத்தின்படி, ஒரு இறையாண்மை கொண்ட நாடு கொள்கையளவில் தனது பழைய கடன்களை திருப்பி செலுத்த சட்டப்பூர்வமாக கடமைப்பட்டுள்ளது” என்று விவேக் ருத்தியா கூறினார்.