இந்தியா

பெண் ராணுவ வீரர்கள் உதட்டுச்சாயம் பூச மற்றும் பொட்டு, காதணிகள் அணிய தடை: புதிய விதிமுறைகள் வெளியீடு

இந்திய ராணுவம் திருத்தப்பட்ட 174 பக்கங்கள் கொண்ட புதிய சீருடை கையேடு ஒன்றை அறிமுகப்படுத்தியது.

ராணுவ சீருடைகள்-2026 அறிமுகம்:

இந்திய ராணுவம் ‘ராணுவ சீருடைகள்-2026’ என்ற ஒரு விரிவான திருத்தப்பட்ட 174 பக்கங்களை கொண்ட புதிய சீருடை கையேடு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது ராணுவத்தால் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட முந்தைய விதிமுறைகளுக்கு மாற்றாக வந்துள்ளது.

குளிர்கால ஜாக்கெட்டுகள்:

இதன்படி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விதிகளில், முக்கிய அம்சம்ங்களில் ஒன்றான குளிர்கால ‘உடை 3B’ ராணுவ உடை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சீருடையில் அங்கோலா சட்டை, போர் ஜாக்கெட் மற்றும் பெரெட் அகியவை அடங்கும். இது ராணுவ வீரர்களுக்கு தரம் உயர்த்தப்பட்ட குளிர்கால உடையை உறுதி செய்கிறது.

பாரம்பரிய இந்திய உடையுடன் ஒருங்கிணைக்கும் விதமாக, முதன்முறையாக ராணுவ அதிகாரிகள் கழுத்தை மூடிய ‘பந்தி’ ஜாக்கெட்டுகள் அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மெஸ் உடை எண் 5 மற்றும் 6-லிருந்து பாரம்பரிய பவுச் பெல்ட்டை நீக்கியுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட படைப்பிரிவு மற்றும் படை நிகழ்வுகளின் போது, அதை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

விழா அணிவகுப்புகளின் போது ஆய்வு அதிகாரிகள் வாள்களை எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராணுவம், காலனித்துவ காலத்தில் வேரூன்றிய பல பாரம்பரிய குறிப்புகளையும் விழாக்கால நடைமுறைகளையும் திருத்தியுள்ளது. "ராயல்" உட்பட சில காலாவதியான சொற்கள் அதிகாரப்பூர்வ உடை விதிமுறைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

பணியில் இருக்கும் ​​வீரர்கள் பொதுவாக பச்சை குத்திக்கொள்வதோ அல்லது காது, மூக்குகளில் உபகரணங்கள் அணிவதோ தடை செய்யப்பட்டுள்ளது.

வெளிப்படையாகத் தெரியும் மதச் சின்னங்கள் மற்றும் அடையாளங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், நிறுவப்பட்ட ராணுவ மரபுகளுக்கு இணங்க சீக்கிய வீரர்களுக்கு குறிப்பிட்ட விலக்குகள் நடைமுறையில் உள்ளன.

ராணுவம் விரிவான தோற்றப் பராமரிப்புத் தேவைகளையும் கோடிட்டுக் காட்டியுள்ளது. அதன்படி மீசையின் நீளம் 12 சென்டிமீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும். சீருடையில் இருக்கும்போது வீரர்கள் வாசனைத் திரவியங்கள் அல்லது டியோடரண்டுகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை, இருப்பினும், ஆஃப்டர்ஷேவ் லோஷன்கள் அனுமதிக்கப்படுகின்றன.

ராணுவ பெண்களுக்கு கட்டுப்பாடு:

இந்த புதிய விதிமுறைகள் பெண் அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வுகளின் போது, ​​கணுக்கால் நீள நேரான கால்சட்டை மற்றும் துப்பட்டாவுடன் புடவைகள் அல்லது குர்தா-சல்வார் ஆடைகளை அணிய அனுமதிக்கிறது.

இருப்பினும் முறையான மற்றும் சீரான தோற்றத்தை பேணுவதற்காக கை இல்லாத குர்தாக்களையும், பலசோக்கள் மற்றும் சிகரெட் பேன்ட்கள் போன்ற சாதாரண கீழ் ஆடைகளையும் இந்த கையேடு தடை செய்கிறது.

ராணுவச் சீருடையில் இருக்கும் பெண் வீரர்கள் கடுமையான தோற்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் வகையில் உதட்டுச்சாயம், வண்ண நகப்பூச்சு, பொட்டுகள் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.