இந்தியா

12.5 லட்சம் இந்திய ராணுவ வீரர்களுக்கு இனிமேல் இயற்கை பருப்பு வகைகள்

சேமிப்பு கிடங்கில் இருந்து விநியோகச் சங்கிலியை வகுப்பதற்கு அரசு கூட்டுறவு நிறுவனங்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவ வீரர்களுக்கு நிலையான ஊட்டச்சத்தை வழங்கும் வகையில், செயற்கை பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல் வளர்க்கப்படும் இயற்கை பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

செயற்கை பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல் வளர்க்கப்படும் இயற்கை பருப்பு வகைகள், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இரத்த சர்க்கரை அளவைச் சீராக்கி, உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

இந்நிலையில் 12.5 லட்சத்திற்கும் அதிகமான படை வீரர்களுக்கு டன் கணக்கில் இயற்கை பருப்பு வகைகளைக் கொள்முதல் செய்து விநியோகம் செய்யவும், மேலும் அதற்கான ஆதாரங்களைக் கண்டறியவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சேமிப்பிலிருந்து விநியோகம் வரையிலான விநியோகச் சங்கிலியை வகுப்பதற்கு அரசு கூட்டுறவு நிறுவனங்களான நாஃபெட் மற்றும் என்.சி.சி.எஃப்-க்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்(FPOs) அதுபோன்ற பிற நிறுவனங்கள் மற்றும் இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் விவசாயிகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.

இயற்கை முறையில் விளைந்த பருப்பு வகைகளின் சேமிப்புக் காலம் குறைவு. எனவே, பண்ணையில் இருந்து நுகர்வுப் புள்ளி வரை, இதுபோன்ற பருப்பு வகைகளுக்கு முறையான சான்றிதழ் பெறுவதும் முக்கியமானது.

குஜராத், மத்தியப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளில் (FPOs), கொண்டைக்கடலை, பாசிப்பயறு, உளுந்து மற்றும் துவரம் பருப்பு உள்ளிட்ட இயற்கை பருப்பு வகைகள் உள்ளன.

ஒரு பொருளுக்கு "PGS இந்தியா நேச்சுரல்" என்ற தகுதி வழங்கப்பட்ட பின்னரே, இயற்கை வேளாண் பொருட்கள் "இயற்கை விவசாயச் சான்றிதழ்" என்ற தகுதியைப் பயன்படுத்த முடியும்.

இது வேளாண் அமைச்சகத்தின் கீழ் ரசாயனமற்ற விவசாயத்திற்கான ஒரு பரவலாக்கப்பட்ட, சக மதிப்பாய்வு செய்யப்பட்ட சான்றிதழ் வழங்கும் முறையாகும்.

ஒரு விவசாயியின் பயிர்கள் செயற்கை உரங்கள் இல்லாமல் வளர்க்கப்படுகின்றன என்பதை இது சரிபார்க்கிறது.

இயற்கை விளைபொருட்கள், அரசின் தேசிய இயற்கை உற்பத்தித் திட்டத்தின் (NPOP) கீழ் அங்கீகாரம் பெற்ற சுதந்திரமான மூன்றாம் தரப்பு முகமைகளாலும் சான்றளிக்கப்படுகின்றன.

மேலும், அவை பொதுவாக நாட்டின் உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான FSSAI-இன் நிர்வாகத்தின் கீழ் உள்ள ‘ஜெய்விக் பாரத்’ முத்திரையின் கீழ் விற்கப்படுகின்றன.