மத்திய காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள யூஸ்மார்க் மலைப்பகுதியில் நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கிச் சூட்டில், தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
புத்காம் மாவட்டத்தின் யூஸ்மார்க் பகுதியில் உள்ள கோராக் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் ஸ்ரீநகர் பிரிவினர் இணைந்து அந்தப் பகுதியில் அதிரடி கூட்டுத் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
பாதுகாப்புப் படையினர் கோராக் பகுதியில் தீவிரமாகத் தேடி வந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் சில நடமாட்டங்கள் இருப்பதை ராணுவத்தினர் கவனித்தனர். உடனே அவர்களை சரணடையுமாறு பாதுகாப்புப் படையினர் எச்சரித்தனர். ஆனால், அதற்குப் பணிய மறுத்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கித் துப்பாக்கியால் சரமாரியாகச் சுடத் தொடங்கினர்.
இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் தங்களின் தற்காப்பிற்காக எதிர்த்தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே நடந்த இந்த பயங்கரமான துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி, தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர் என்பதை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது.
எனினும், கொல்லப்பட்ட பயங்கரவாதியின் பெயர் மற்றும் முழு விவரங்களை ராணுவம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. மேலும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் குறித்த விவரங்களும் முழுமையாகத் தெரியவரவில்லை.
இதுகுறித்து இந்திய ராணுவத்தின் 'சினார் கார்ப்ஸ்' தனது எக்ஸ் தளத்தில், "குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் அடிப்படையில், யூஸ்மார்க்கின் கோராக் பகுதியில் ராணுவம், ஜே&கே போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து கூட்டுத் தேடுதல் வேட்டையை மேற்கொண்டன.
அப்போது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை கவனித்த ராணுவத்தினர் எச்சரித்தபோது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி நடுநிலையாக்கப்பட்டார். தற்போதும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது" எனப் பதிவிட்டுள்ளது.
பயங்கரவாதி கொல்லப்பட்ட போதிலும், அந்தப் பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் தங்களது தேடுதல் வேட்டையைத் தீவிரமாகத் தொடர்ந்து வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்புதான் இதே யூஸ்மார்க் பகுதியில் 'யாசிர்' என்ற மற்றொரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.