இந்திய விமானப்படை விங் கமாண்டர் ஒருவர் ஹனி டிராப் எனப்படும் தேன் பொறியில் சிக்கி நாட்டின் ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானப்படையின் உளவுப் பிரிவு அளித்த தகவலின் பேரில், டெல்லி காவல்துறை மே மாத இறுதியில் இவரைக் கைது செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை வட்டாரங்களின் கூற்றுப்படி, சோஷியல் மீடியா வாயிலாக அந்த அதிகாரிக்கு பெண் ஒருவருடன் அறிமுகம் கிடைத்துள்ளது.
ஹனி டிராப் என்பது இவ்வாறு பெண்கள் மூலம் ஒருவரை வலையில் வீழ்த்தி தங்களுக்கு தேவையானதை செய்ய வைப்பதை குறிக்கிறது.
இதற்கு விதிவிலக்கின்றி அந்த அதிகாரிக்கு ஆன்லைனில் ஏற்பட்ட இந்தப் பழக்கம், நாளடைவில் இந்திய ராணுவத்தின் வகைப்படுத்தப்பட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் முக்கியமான தகவல்களை அனுப்பும் அளவிற்குச் சென்றுள்ளது.
இந்தியாவின் ராணுவ ரகசியங்களைச் சேகரிப்பதற்காக நடத்தப்பட்ட பாகிஸ்தானின் உளவு வேலையின் ஒரு பகுதியே இதுவாகும்.
டெல்லி காவல்துறை ஜூலை தொடக்கத்திலேயே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டது.
பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் எந்த அளவிற்கு வெளியே கசிந்துள்ளன, இந்த உளவு வலையமைப்பில் இன்னும் யார் யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது குறித்த பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.