இந்தியாவின் வான் எல்லையைப் பாதுகாப்பதிலும், இயற்கை பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் இந்திய விமானப் படை , இன்று தனது 94-வது நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது.
இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் உத்தரப் பிரதேசத்தின் ஹிண்டன், ராஜஸ்தானின் ஜோத்பூர் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் மிக விமரிசையாகத் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்திய விமானப் படை 1932 அக்டோபர் 8 அன்று பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நிறுவப்பட்டது. 1933-ல் இதன் முதல் செயல்பாட்டுப் படைப்பிரிவு (No. 1 Squadron) உருவாக்கப்பட்டது.
ஆரம்பத்தில் 'ராயல் இந்தியன் ஏர் ஃபோர்ஸ்' என்று அழைக்கப்பட்ட இதில், இந்தியா 1950-ல் குடியரசு நாடான பிறகு 'ராயல்' என்ற வார்த்தை நீக்கப்பட்டு 'இந்திய விமானப் படை' என மாற்றப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பிறகு 1947-48 ஜம்மு காஷ்மீர் நடவடிக்கைகள், 1965 மற்றும் 1971 போர்கள், கார்கில் போர் மற்றும் சமீபத்திய 'ஆபரேஷன் சிந்துார்' ஆகியவற்றில் விமானப் படை முக்கியப் பங்காற்றியுள்ளது.
2026-ஆம் ஆண்டின் உலகளாவிய வான்சக்தி தரவரிசையில் இந்திய விமானப் படை 6-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு விமானப் படை தினத்திற்கான அதிகாரப்பூர்வ தீம்:
"இந்திய விமானப் படை – தவறாதது, ஊடுருவ முடியாதது மற்றும் துல்லியமானது"
கடந்த ஆண்டு 'சக்ஷம், சஷக்த், ஆத்மநிர்பர்' அதாவது திறமையான, சக்திவாய்ந்த, சுயசார்பு என்ற மையக்கருத்தில் தேஜாஸ், ஏ.எம்.சி.ஏ மற்றும் இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் போன்ற உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டின் அதிகாரப்பூர்வ அணிவகுப்பு மற்றும் வான்வழிப் சாகசக் காட்சி உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் இன்று நடைபெறுகிறது.
விமானப் படைத் தளபதி ஏ.பி. சிங் இந்த அணிவகுப்பை ஆய்வு செய்து ஜனாதிபதி விருதுகளை வழங்குகிறார். இதில் ரஃபேல், சுகோய் (Su-30MKI), மிக்-29, தேஜாஸ் போர் விமானங்களும், சி-17 மற்றும் அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் பங்கேற்கின்றன.
ராஜஸ்தானின் ஜோத்பூர் விமானப் படை தளத்தில் இன்று பிரம்மாண்ட வான்வழிச் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 'சூர்யகிரண்' ஏரோபாட்டிக் குழுவினர் தங்களது வியக்கத்தக்க வான்வழி சாகசங்களைச் செய்து காட்டுகின்றனர். இந்நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.
பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் அக். 24, 25, 26 ஆகிய தேதிகளில் வாரணாசியில் கங்கை நதிக்கு மேல் வான்வழி சாகசங்கள் நடத்தப்படவுள்ளன. இதன் முக்கிய நிகழ்வு அக்டோபர் 25 அன்று நமோ காட்டில் (Namo Ghat) நடைபெறவுள்ளது.
இந்த விமானப் படை தினக் கொண்டாட்டங்கள், செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 12 வரை நடைபெறும் சர்வதேச கூட்டு வான்வழிப் பயிற்சியான 'தரங் சக்தி 2026' உடன் இணைந்து நடத்தப்படுகிறது. இது நட்பு நாடுகளின் விமானப் படைகளுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவும்.
தற்போது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மற்றும் சேவையாற்றிய முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுகளும் புதுடெல்லியில் நடத்தப்பட்டு வருகின்றன.