இந்தியா

“2035-க்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும்” - இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், பல திட்டங்கள் வரிசையில் உள்ளன.

2035 ஆம் ஆண்டிற்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற மூன்றாவது தேசிய விண்வெளி தினக் கொண்டாட்டத்தில் பேசிய நாராயணன், இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், பாரதிய அந்தரிக்ஷா நிலையத்தின் முதல் தொகுதிக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

கொண்டாட்ட விழாவில் பேசிய அவர்.,

“இன்று, நாம் மூன்றாவது தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடுகிறோம். இதன் கருப்பொருள் மிகவும் முக்கியமானது: விண்வெளித் துறையில் புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய தலைமைத்துவத்தை நோக்கிய இலட்சியம்.

இந்தியா 64 ஆண்டுகளுக்கு முன்பு தனது விண்வெளித் திட்டத்தைத் தொடங்கியது. இன்று நாம் புவி கண்காணிப்பு, தொலை உணர்வு, தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு, தொலைதூரக் கல்வி, பேரிடர் எச்சரிக்கை மற்றும் தணிப்பு, ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பை உறுதி செய்தல், வழிசெலுத்தல், நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தடமறிதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட துறைகளில் சாமானிய மக்களுக்குச் சேவை செய்து வருகிறோம்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், பல திட்டங்கள் வரிசையில் உள்ளன. நாங்கள் ககன்யான் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். மேலும், நமது சொந்த விண்வெளி நிலையமான பாரதிய அந்தரிக்ஷா நிலையத்தை நிறுவும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளோம்.

முதல்கட்ட பணிகளுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது, 2035-ஆம் ஆண்டுக்குள் விண்வெளி நிலையத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.