வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் தாயகம் திரும்புவதற்கு இந்தியா ஆதரவு தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் பாதுகாப்பாக திரும்புவதற்கும் நியாயமான விசாரணையை எதிர்கொள்வதற்கும் வங்கதேச அரசு இரண்டு முக்கிய உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்று இந்தியா விரும்புவதாக பிபிசி வங்காளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் போராட்டம் காரணமாக வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகினார். அந்நாட்டு ராணுவம் அவரை இந்தியாவுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தது.
அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை வைத்து நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அவர் நாடு திரும்பினால் தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலை உள்ளது. இருந்த போதிலும் இந்தியாவில் இருந்து சொந்த நாடு திரும்புவேன் என்று ஷேக் ஹசீனா தெரிவித்திருந்தார்.
இந்தியாவும் அவரை வங்கதேசம் அனுப்ப விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால், இரண்டு நிபந்தனைகளை முன் வைத்துள்ளது.
2024 ஆகஸ்ட் 5-ம் தேதி வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் கலவரத்தை தொடர்ந்து ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். தற்போது அவர் மீண்டும் நாடு திரும்பும்போது, வங்கதேச ராணுவம் அவரை அழைத்து வருவதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என இந்தியா விரும்புவதாகக் கூறப்படுகிறது. ராணுவ விமானம் அல்லது தரைவழியாக இந்தப் பயணம் அமையலாம்.
நியாயமான விசாரணை: 2024-ம் ஆண்டு மாணவர் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை தொடர்பான வழக்கில் ஹசீனாவுக்கு மீண்டும் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என இந்தியா விரும்புவதாகத் தகவல் தெரிவிக்கிறது.
இதற்கிடையில், டிசம்பர் மாதம் வங்கதேசம் திரும்ப திட்டமிட்டுள்ளதாக ஹசீனா தெரிவித்துள்ளார். நவம்பர் 9-ம் தேதி புதிய பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்களுக்கும் விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் பதில் கூறவில்லை.