இந்தியா மற்றும் வெனிசுலா இடையிலான நீண்டகால நட்புறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் 5 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று புதுடெல்லி வந்தடைந்தார்.
ஜூன் 3 முதல் ஜூன் 7 வரை நடைபெறும் இப்பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் மருந்துத் துறை சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
புதுடெல்லி வந்தடைந்த வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் முறைப்படி வரவேற்றனர்.
நாளை ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
அவருடன் வெனிசுலாவின் வெளியுறவு, பொருளாதாரம், நிதி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளின் அமைச்சர்கள் அடங்கிய பெரிய குழுவுடன் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் 3-வது பெரிய நாடாக வெனிசுலா உருவெடுத்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விநியோகத்தை மேலும் அதிகரிக்க இரு நாடுகளும் திட்டமிட உள்ளனர்.
கடந்த நிதியாண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 678.94 மில்லியன் டாலராக இருந்தது. இதனை மேலும் உயர்த்த புதிய முதலீடுகள் குறித்து ஆலோசிக்கப்படும்.
வெனிசுலா குழுவினர் இந்தியாவின் மருந்து உற்பத்தி, வாகன உற்பத்தி மற்றும் ஆயுஷ் மையங்களை நேரில் பார்வையிட்டு புதிய கூட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளனர்.
தனது டெல்லி பயணத்தின் ஒரு பகுதியாக, வெனிசுலா தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளார்.
இந்த 6-வது இந்தியப் பயணம் இரு நாடுகளின் உலகளாவிய தெற்கு கூட்டணிக் கொள்கையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.