இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த பட்ஜெட்டை ரூ.2.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.7.5 லட்சம் கோடியாக மும்மடங்கு அதிகரித்துள்ளதாகவும், மேலும் இதன்மூலம் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்திய பாதுகாப்பு தொடர்பான ‘டெஃப்கான் 2026’ (Defcon) மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், பாதுகாப்பு பட்ஜெட்டை ரூ.2.5 லட்சம் கோடியிலிருந்து மூன்று மடங்கு அதிகரித்து, ரூ.7.5 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், “அதிக செலவினங்களுடன், பாதுகாப்பு உற்பத்தியில் உள்நாட்டுப் பங்களிப்பும் அதிகரித்து வருகிறது. தற்சார்பு என்பது தேசியப் பாதுகாப்பின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.
பாதுகாப்பு உபகரணங்களை உள்நாட்டிலேயே வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி செய்வதில் இந்தியா அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினம் அதிகரித்து ரூ. 29,000 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த ஒதுக்கீட்டில் சுமார் 25 சதவீதம் தொழில் மற்றும் கல்வித் துறைகளுக்கு வழங்கப்படுகிறது, மேலும் அவற்றின் பங்களிப்பை அதிகரிக்க அரசாங்கம் முயன்று வருகிறது.
இந்த பொருட்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் நோக்கத்துடன், 5,522 பொருட்கள் சாதகமான உள்நாட்டுமயமாக்கல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சி, இறக்குமதியைச் சார்ந்திருப்பதை குறைப்பதையும், பாதுகாப்பு விநியோகச் சங்கிலி முழுவதும் இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் தனியார் துறைக்கு ஒரு பெரிய பங்கு உள்ளது. வழக்கமான ஏவுகணைத் தொழில்நுட்பம் தனியார் தொழில்துறைக்கு மாற்றப்படும்;
இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்கும் தொழில்நுட்பங்கள் விரிவடையக்கூடும்.
சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தியும் கணிசமாக அதிகரித்துள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் பாதுகாப்பு உற்பத்தி ரூ. 1.78 லட்சம் கோடியாக சாதனை அளவை எட்டியுள்ளது; அதே நேரத்தில் பாதுகாப்பு ஏற்றுமதி ரூ. 38,424 கோடியாக உயர்ந்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.
இந்திய ஆயுதப் படைகள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப சவால்களான, ஐந்தாம் மற்றும் ஆறாம் தலைமுறை போர் விமானங்கள் உள்ளிட்ட புதிய தலைமுறை ராணுவத் தொழில்நுட்பத்தை நோக்கி நாடு செயல்பட்டு வருகிறது.
அதேவேளையில் நிலப்பரப்பு, தொழில்நுட்பம் மற்றும் சிந்தனை ஆகியவை எதிர்காலப் போரின் முக்கியக் கூறுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
சைபர் பாதுகாப்பு ஒரு புதிய செயல்பாட்டுத் துறையாக உருவெடுத்துள்ளதால், வழக்கமான ராணுவத் திறன்களுடன் தொழில்நுட்பத் தயார்நிலையும் முக்கியத்துவம் பெறுகிறது” என்று அவர் கூறினார்.
மேலும் அவர், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட, கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி-v முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
இந்தியாவின் சொந்த தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல், காலப்போக்கில் சர்வதேச நாடுகளின் ராணுவ உபகரணத் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு பாதுகாப்புச் சூழலமைப்பை உருவாக்குவதே இதன் பரந்த நோக்கம் என்றும் அவர் கூறினார்.