இந்தியா

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 'பிரளய்' ஏவுகணை: வெற்றிகரமாக சோதித்தது இந்தியா

பல்வேறு இலக்குகளுக்கு எதிராக பல வகையான போர்முனைகளை சுமந்து செல்லும் திறன் இந்த ஏவுகணைக்கு உண்டு.

வழக்கமான போர்முனைகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட 'பிரளய்' எனும் குவாசி-பாலஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது. ஒடிசா கடற்கரைக்கு அப்பால் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) உருவாக்கப்பட்ட 'பிரளய்', 500 முதல் 1,000 கிலோ வரையிலான சுமையை சுமந்து செல்லக்கூடிய, குறுகிய தூரம் கொண்ட ஏவுகணையாகும்.

நேவிகேஷன் தொழில்நுட்பம்:

"இந்த வெற்றிகரமான சோதனையின் மூலம், இந்த ஏவுகணை அமைப்பை ராணுவத்தில் சேர்ப்பதற்கான சூழல் உறுதியாகியுள்ளது" என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, திட எரிபொருளை கொண்ட இந்த குவாசி-பாலஸ்டிக் ஏவுகணை, மிக துல்லியமான இலக்குகளை தாக்க அதிநவீன வழிகாட்டுதல் மற்றும் நேவிகேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. பல்வேறு இலக்குகளுக்கு எதிராக பல வகையான போர்முனைகளை சுமந்து செல்லும் திறன் இந்த ஏவுகணைக்கு உண்டு.

சோதனை வெற்றி:

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 'எக்ஸ்' தள பதிவில், "டிஆர்டிஓ இன்று காலை 11:10 மணிக்கு ஒடிசா கடற்கரை அருகே, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 'பிரளய்' ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது.

பயனர் மதிப்பீட்டு சோதனைகளின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்த சோதனையில், நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளும் வெற்றிகரமாக எட்டப்பட்டன. பல்வேறு கண்காணிப்பு கருவிகள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிகரமான சோதனை, இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு திறனை வலுப்படுத்துவதில் "மற்றொரு முக்கியமான மைல்கல்" என்று அவர் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT