பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், சமீபத்தில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். இதையடுத்து சீனாவும், பாகிஸ்தானும் கூட்டு அறிக்கையை வெளியிட்டன.
அதில் ஜம்மு-காஷ்மீர் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-
சீனா-பாகிஸ்தான் கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளை இந்தியா முழுமையாக நிராகரிக்கிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள், கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாகவே தொடர்ந்து நீடிக்கும். இவ்விஷயம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கான சட்டப்பூர்வ உரிமை வேறு எந்த நாட்டிற்கும் இல்லை.
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டங்கள், சில இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பிராந்தியங்களில் அமைந்துள்ளன.
இப்பிராந்தியங்களை பாகிஸ்தான் சட்டவிரோதமாகவும் வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்துள்ளது. இதை வலுப்படுத்தும் அல்லது சட்டப்பூர்வமாக்கும் வகையில் பிற நாடுகள் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம் மற்றும் நிராகரிக்கிறோம்.
இத்தகைய திட்டங்கள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதிக்கின்றன. இந்த கூட்டு அறிக்கையில் சீனா- பாகிஸ்தானுக்கு இடையே எல்லை கடந்த நீர் வள ஒத்துழைப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் இடையே நேரடி எல்லை ஏதும் இல்லை. அவர்களுக்கு இடையே எந்தவொரு எல்லையும் இல்லாத நிலையில் எல்லை கடந்த நீர் வள ஒத்துழைப்பு என்று கூறப்படுவதற்கான கேள்வியே எழவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.