மத்திய ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் ஏற்பட்ட எபோலா வைரஸ் நோய் பரவலை, உலக சுகாதார அமைப்பு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையாக (PHEIC) அறிவித்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் எபோலா வைரஸ் நோய் (EVD) தொடர்பான கண்காணிப்பு மற்றும் தயார்நிலை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் இதுவரை எபோலா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. எபோலாவுக்கான நாட்டின் தயார்நிலை மற்றும் பதில் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வதற்காக, மத்திய சுகாதார செயலாளர் புண்ய சலில ஸ்ரீவஸ்தவா தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார செயலாளர்களுடன் உயர்மட்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது .
தகவல்களின்படி, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கூட்டத்தின்போது, "இந்தியாவில் இதுவரை எபோலா வைரஸ் நோயின் எந்தவொரு பாதிப்பும் கண்டறியப்படவில்லை. மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கண்காணிப்பு மற்றும் தயார்நிலை நடவடிக்கைகளை அரசு முனைப்புடன் வலுப்படுத்தியுள்ளது" என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.
அனைத்து மட்டங்களிலும் தயார்நிலையை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன. பயணிகள் வருகைக்கு முந்தைய மற்றும் வருகைக்கு பிந்தைய பரிசோதனை, தனிமைப்படுத்தல் நெறிமுறைகள், நோயாளி கையாளுதல், பரிந்துரை வழிமுறைகள் மற்றும் ஆய்வக பரிசோதனை தொடர்பான விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOPs) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஏற்கனவே பகிரப்பட்டுள்ளன.