இந்தியா

ராக்கெட் செலுத்துவதற்கு உலகிலேயே அதிகமாக செலவு செய்யும் இந்தியா: ஆய்வில் தகவல்

ஒரு கிலோகிராம் ராக்கெட் ஏவுதலுக்கு இந்தியா உலகிலேயே அதிகம் செலவிடுவதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வில் விண்வெளிக்கு ராக்கெட் செலுத்துவதில் அமெரிக்காவை விட நான்கு மடங்கு அதிகமான தொகையை உலகிலேயே இந்தியாதான் செலவழித்து வருவதாக தெரிவித்துள்ளது.

தேசிய விண்வெளி தினம்

இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன் 3 என்ற திட்டத்தின் மூலம் நிலவின் தென் துருவத்திற்கு கடந்த 2023 ஆகஸ்ட் 23 அன்று ராக்கெட்டை வெற்றிகரகமாக செலுத்தியது. மேலும் இதன் வெற்றியை தொடர்ந்து, இந்தியா தனது மூன்றாவது தேசிய விண்வெளி தினத்தை இன்று கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் அலெசியோ டெர்சி மற்றும் இத்தாலியை சேர்ந்த பிரான்செஸ்கோ நிக்கோலி ஆகியோர் எகனாமிக் லெட்டர்ஸ் என்ற மதிப்பாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

இந்த ஆய்வில், “இந்தியா 1960 மற்றும் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் 6,740-க்கும் மேற்பட்ட ராக்கெட் செலுத்தியுள்ளதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதன்மூலம் 2025-ல் ஒரு கிலோ எடைகொண்ட சுமையை புவியின் தாழ் சுற்றுப்பாதைக்கு ஏவுவதற்கான இந்தியாவின் சராசரி செலவு ஒரு கிலோ கிராமுக்கு சுமார் $13,302 ஆக இருந்தது.

ஆனால் அமெரிக்கா ஒரு கிலோவுக்கு $3,225 என்ற மிகக் குறைந்த செலவையே பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவின் ஒரு கிலோ கிராம் சுமையை ஏவுதல்களுக்கான செலவு, அமெரிக்காவை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது” என்று அவர்கள் தெரிவித்தனர்.

கேம்பிரிட்ஜ் மற்றும் டுரின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 2025-ல் உலகளாவிய சராசரி ஏவுதல் செலவு ஒரு கிலோ கிராமுக்கு $3,868 ஆக இருந்த நிலையில், அமெரிக்காவில் சராசரியாக ஒரு கிலோ கிராமுக்கு $3,225, ஜப்பானில் $5,287, சீனாவில் $5,809, ரஷியாவில் $6,682 மற்றும் ஐரோப்பாவில் $9,897 என இருந்தது. இந்தியா ஒரு கிலோ கிராமுக்கு சுமார் பதின்மூன்று லட்சம் ரூபாய் ($13,302) செலவுடன் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்தது என்று அவர்கள் கூறினர்.

இந்தியாவின் ராக்கெட்டுகள் பொதுவாக சிறிய அளவிலான சுமைகளையே சுமந்து செல்கின்றன. அதாவது நிலையான செலவுகள் குறைவான கிலோகிராம் எடையிலேயே பரப்பப்படுகின்றன.

இதன் விளைவாக, திட்டத்தின் மொத்த செலவுகள் குறைவாக இருக்கக்கூடும் என்றபோதிலும், ஒரு கிலோ கிராமுக்கான வெளிப்படையான செலவு கணிசமாக அதிகமாவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இஸ்ரோ கருத்து

இந்த ஆய்வு குறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் கூறுகையில், தவறான தரவுகளை ஆய்வாளர்கள் பயன்படுத்தி உள்ளதாக கூறினார்.

இஸ்ரோவின் முன்னாள் தலைவரான டாக்டர் எஸ். சோம்நாத் கூறுகையில், அமெரிக்காவை சேர்ந்த ஃபால்கன் 9-க்கான ஒரு கிலோ கிராம் செலவு இந்தியாவை விடக் குறைவாக உள்ளது.

ஆனால் அவர்கள் அந்தப் பலன்களை யாருக்கும் வழங்காமல், தங்கள் சொந்த ஏவுதல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளுவதாக அவர் கூறினார்.

இதையடுத்து இந்தியாவின் விண்வெளி ஒழுங்குமுறை மற்றும் ஊக்குவிப்பு அமைப்பான இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் (இன்ஸ்பேஸ்) மற்றும் இந்திய விண்வெளி சங்கம் (ஐஎஸ்பிஏ) ஆகிய இரண்டும், இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.

நாடாளுமன்றத்தில் அறிக்கை

இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த 2018-ல் அரசு அளித்த பதில் அறிக்கையில், ஒரு பிஎஸ்எல்வி திட்டத்திற்கு சுமார் ரூ. 204 கோடியும், அதே சமயம் ஒரு லான்ச் வெஹிக்கிள் மார்க்-3 (முன்னர் ஜிஎஸ்எல்வி மார்க் III என அழைக்கப்பட்டது) திட்டத்திற்கு ஏறக்குறைய ரூ. 434 கோடியும் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா உலகளவில் தலைசிறந்த நாடாக உருவெடுக்கும் என்று கடந்த 2014-இல் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், “அகமதாபாத்தில் ஒரு கிலோமீட்டர் ஆட்டோ பயணத்திற்கு 10 ரூபாய் ஆகிறது, ஆனால் மங்கள்யான் திட்டத்தின் மூலம் இந்தியா ஒரு கிலோமீட்டருக்கு 7 ரூபாய் செலவில் செவ்வாய் கிரகத்தை அடைந்தது, இது உண்மையிலேயே ஆச்சரியமானது,” என்று கூறினார்.

மேலும் சமீபத்தில் ஆகஸ்ட் 21 அன்று, பிரதமர் நரேந்திர மோடி 20 இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிறுவனர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, உலகம் விண்வெளியைப் பற்றி நினைக்கும்போது இந்தியாவை நோக்கிய ஒரு சூழலையும், அதற்கான ஒரு அமைப்பையும் உருவாக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

இந்தியாவின் விண்வெளித் துறை, உலகளாவிய திறமையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளை நாட்டிற்கு ஈர்க்கும் ஒரு காந்தமாகச் செயல்பட முடியும் என்றும் அவர் கூறினார்.

காரணம்

இந்த நிலையில் அமெரிக்காவின் குறைந்த அளவிலான செலவு அனுகூலத்திற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணம் மறுபயன்பாட்டு அமைப்புகளே என ஆய்வாளர்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தியா, மறுபயன்பாட்டு ஏவுகணை வாகன (RLV) தொழில்நுட்பங்களுடன் பரிசோதனை செய்து, தொழில்நுட்ப செயல்விளக்கங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இருப்பினும், இந்தியா இன்னும் ஒரு சுற்றுப்பாதை மறுபயன்பாட்டு ராக்கெட்டை சேவையில் ஈடுபடுத்தவில்லை. ஒரு மறுபயன்பாட்டு அமைப்பாகக் கருதப்படும், திட்டமிடப்பட்ட அடுத்த தலைமுறை ஏவுகணை வாகனம், இன்னும் உருவாக்க நிலையில் தான் உள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.