பாகிஸ்தான் தன் குறுகிய நோக்கங்களுக்காக, ஓ.ஐ.சி. அமைப்பை தவறாக பயன்படுத்திக் கொள்கிறது என இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஓ.ஐ.சி. நிறைவேற்றிய தீர்மானத்தை இந்திய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.
அண்மையில் ஈராக் தலைநகர் பாக்தாதில் நடைபெற்ற ஓ.ஐ.சி. அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் 'ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370வது சட்டப்பிரிவை ரத்து செய்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த தீர்மானத்தை நிராகரித்து வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ஓ.ஐ.சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒருதலைப்பட்சமானவை. உண்மைக்கு புறம்பானவை. இவை அனைத்தும் பாகிஸ்தானால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை.
தன் குறுகிய மற்றும் பாரபட்சமான நோக்கங்களுக்காக, ஓ.ஐ.சி. அமைப்பை பாகிஸ்தான் மீண்டும் ஒருமுறை தவறாக பயன்படுத்த அனுமதித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது." என சாட்டியுள்ளது.
இந்த தீர்மானங்களை இந்தியா நிராகரிக்கிறது. இந்தியாவின் உள்விவகாரங்களில் கருத்து தெரிவிக்க ஓ.ஐ.சி.க்கு எந்த உரிமையும் இல்லை.
ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் எங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதிகள். இந்த உண்மையை மாற்ற முடியாது. அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்ட பின், ஜம்மு - காஷ்மீரில் உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளது.
தன் சொந்த நாட்டில் சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் மத ரீதியான வன்முறைகள் மீதான சர்வதேச கவனத்தை திசைதிருப்பவே, இந்தியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் முன்வைத்துள்ளது.
பாகிஸ்தானின் பொய் பிரசாரங்களுக்கு ஓ.ஐ.சி. தொடர்ந்து ஆதரவளிப்பது, அந்த அமைப்பின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புகிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.