திபெத் எல்லையில் உள்ள நேபாளத்தில் மலைகளுக்கு இடையில் ஓடும் ஆற்றில் எதிர்பாராத வகையில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு எழுந்தது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இன்று காலை திபெத்தில் இருந்து திடீரென வெள்ளம் கரைபுரண்டு எழுந்துள்ளது. இந்த வெள்ளம் போதே கோஷி ஆற்றில் கலக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரசுவா மற்றும் தாடிங் மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேபோல் நுவாகோட் மாவட்டமும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேபாள ராணுவம் மீட்பு, தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளது. நேபாளம் பெருவெள்ளத்திற்கு கோடாரி பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கமே காரணம் என கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தால் பனிப்பாறை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும், 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்ததாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த வெள்ளத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 ஆண்கள், ஒரு பெண் ஆவார்கள். நான்கு பேர் உடல்களும் திரிஷுலி ஆறு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சம்பவத்தை தொடர்ந்து, இந்திய பிரதமர் மோடி உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவிடம் தொலைபேசியில் பேசி, வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தேன். இந்த இக்கட்டான நேரத்தில், நாம் நேபாளத்தில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு உறுதுணையாக இருப்போம்
நேபாளத்திற்கு சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.