இந்தியா-நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று (திங்கட்கிழமை) கையெழுத்து ஆகிறது. இருதரப்பு வர்த்தகத்தை 5 ஆண்டுகளுக்குள் இரட்டிப்பு ஆக்குவதே இதன் நோக்கம் ஆகும்.
இந்தியா இதுவரை ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஓமன், ஐரோப்பிய ஒன்றியம், மொரீஷியஸ் ஆகிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இவற்றில் சில ஒப்பந்தங்கள் அமலுக்கு வந்து விட்டன. நியூசிலாந்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததாக கடந்த டிசம்பர் 22-ந் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 4 மாதங்கள் கழித்து, இந்தியா-நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று (திங்கட்கிழமை) கையெழுத்து ஆகிறது. டெல்லி பாரத் மண்டபத்தில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், நியூசிலாந்து வர்த்தகம் மற்றும் முதலீட்டுத்துறை அமைச்சர் டோட் மெக்லே ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது.
இந்தியா-நியூசிலாந்து இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை 5 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆக்குவதே ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும்.
இதன்படி, இந்தியாவுக்கு நியூசிலாந்து ஏற்றுமதி செய்யும் கம்பளி, நிலக்கரி, செம்மறி ஆட்டு இறைச்சி, மரப்பொருட்கள், ஒயின், கிவி பழங்கள், புளூபெர்ரி உள்பட 95 சதவீத பொருட்களுக்கு வரி ரத்து செய்யப்படும் அல்லது குறைக்கப்படும்.
ஆனால், இந்திய விவசாயிகள் மற்றும் உள்நாட்டு தொழில் துறையை பாதுகாப்பதற்காக, நியூசிலாந்தின் பால் பொருட்கள், வெங்காயம், சர்க்கரை, மசாலா பொருட்கள், சமை யல் எண்ணெய், ரப்பர் போன்றவற்றுக்கு இந்தியா எந்த சலுகையும் அளிக்காது.
மூக்கடலை, பட்டாணி, மக்காச்சோளம், பாதாம், செயற்கை தேன், விலங்கு மற்றும் தாவர கொழுப்பு, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபர ணங்கள், தாமிரம் மற்றும் அதன் பொருட்கள், அலுமினிய பொருட்கள் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் அடங்காது.
அடுத்த 15 ஆண்டுகளில், இந்தியாவில் உற்பத்தி, உள்கட்டமைப்பு, சேவைகள், புத்தாக்கம், வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் 2 ஆயிரம் கோடி டாலர் முதலீடு செய்ய நியூசிலாந்து உறுதி பூண்டுள்ளது. சேவைத்துறையை பொறுத்தவரை திறன்சார்ந்த பணிகளில் இந்திய தொழில்நுட்ப பணியாளர்களுக்கு நியூசிலாந்து தற்காலிக வேலைவாய்ப்பு விசா வழங்கும். ஆண்டுக்கு 5 ஆயிரம் விசா ஒதுக்கீடு செய்யப்படும். 3 ஆண்டுகள் வரை தங்கி இருக்கலாம்.
இந்திய ஆயுஷ் மருத்துவர்கள், யோகா பயிற்சியாளர்கள், இந்திய சமையல் கலைஞர்கள், இசை ஆசிரியர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம், என்ஜினீயரிங், சுகாதாரம், கல்வி, கட்டுமானம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விசா சலுகை கிடைக்கும்.
மேலும், ஒப்பந்தத்தின்கீழ், கிவி பழம், ஆப்பிள், தேன் ஆகியவை தொடர்பான வேளாண் தொழில்நுட்ப செயல் திட்டத்தை நியூசிலாந்து அமைக்கும்.
மருந்து பொருட்கள், மருத்துவ சாதனங்கள் ஆகியவற்றை நியூசிலாந்துக்கு இந்தியா ஏற்றுமதி செய்வது அதிகரிக்க இந்த ஒப்பந்தம் உதவும். இந்திய பொருட்கள் வரியின்றி நியூசிலாந்து சந்தையில் நுழைய முடியும்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட நியூசிலாந்து வர்த்தகம் மற்றும் முதலீட்டுத்துறை அமைச்சர் டோட் மெக்லே, தனது மனைவியுடன் இந்தியா வந்து விட்டார். நேற்று இருவரும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் தாஜ்மகாலை சுற்றி பார்த்தனர். இரு அமைச்சர்களும் தொழில் அதிபர்களை அழைத்துப் பேசினர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பியூஸ் கோயல், “இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி இருக்காது. இது. ஆக்ராவைச் சேர்ந்த தோல் ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்" என்று கூறினார்.