இந்தியா

இந்திய உயர்நீதிமன்றங்களில் ஒரே நேரத்தில் 4 தலைமை பெண் நீதிபதிகள்

பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதியாக மீனாட்சி எம். ராய் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதன்முறையாக நான்கு இந்திய உயர் நீதிமன்றங்களில் ஒரே நேரத்தில் பெண் தலைமை நீதிபதிகள் பொறுப்பு வகிக்கவுள்ளனர்.

இந்தியாவில் மொத்தம் 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன. இந்நிலையில் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சங்கம குமார் சாஹூ ஜூன் 4 அன்று ஓய்வுபெறவுள்ளார்.

அதனைத்தொடர்ந்து மே 22 அன்று இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. இந்த கொலிஜியம் சிக்கிம் உயர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி எம். ராய்-ஐ பீகார் மாநிலம் பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை செய்துள்ளது.

மேலும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுனிதா அகர்வால், மேகாலயா உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ரேவதி மோஹிதே டேரே மற்றும் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் நீதிபதி லிசா கில் பொறுப்பேற்கவுள்ளனர்.

அதன்படி ஒரே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள நான்கு உயர் நீதிமன்றங்களில் பெண் தலைமை நீதிபதிகள் அமரவுள்ளனர்.

இது உயர் நீதித்துறையின் வரலாற்றில் முதல் முறையாக ஒரே அமர்வில் நான்கு பெண் நீதிபதிகள் தலைமை பொறுப்பேற்கும் நிகழ்வாகும்.

உயர் நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் மெதுவாக இருப்பினும் தற்போது கண்கூடாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய சட்ட அமைச்சகம் சமர்ப்பித்த தரவுகளின்படி, 2014-ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கு 170 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 96 பேர் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் நியமிக்கப்பட்டவர்களாவர்.

இதே காலகட்டத்தில், ஆறு பெண்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். உச்ச நீதிமன்றக் கொலிஜியத்தின் பரிந்துரைகளுக்குப் பின்னரே நீதிபதி நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்த அரசு, நீதித்துறையில் சமூகப் பன்முகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் பெண் வேட்பாளர்களைப் பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றங்கள் ஊக்குவிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டது.

இதற்கு முன்னதாக இது போன்று நான்கு பெண் நீதிபதிகள் தலைமை நீதிபதிகளாக 2017-ல் பொறுப்பேற்றுள்ளனர். ஆனால், அதில் ஒருவர் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.