ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து விளக்கிய சுபாஷ் சந்திர கார்க், கடந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான நடப்பு விலை ஜிடிபி தரவுகளை அரசு பெருமளவில் மாற்றியமைத்து திருத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) முதல் காலாண்டில் 7.8 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் முதல் பார்வையில் ஈர்க்கக்கூடியதாகத் தெரிந்தாலும், உண்மையான பொருளாதார நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது என்று நாட்டின் முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் கூறியுள்ளார். மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த புள்ளிவிவரங்களின் பின்னணியில் உள்ள கணக்கீடுகள் குறித்து தீவிரமாக ஆராய வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து விளக்கிய சுபாஷ் சந்திர கார்க், கடந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான நடப்பு விலை ஜிடிபி தரவுகளை அரசு பெருமளவில் மாற்றியமைத்து திருத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். முந்தைய ஆண்டின் ஜிடிபி மதிப்பில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் வரை குறைக்கப்பட்டதால், நடப்பு ஆண்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் செயற்கையாக அதிகரித்து 10.3 சதவீத நாமினல் வளர்ச்சியாகக் காட்டப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசு முந்தைய ஆண்டின் ஜிடிபி எண்களை கீழ்நோக்கி மாற்றியமைக்காமல் இருந்திருந்தால், நடப்பு விலையில் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதம் வெறும் 2.5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்திருக்கும் என கார்க் கணக்கிட்டுக் காட்டியுள்ளார். அடிப்படை எண்களை மாற்றியமைத்ததன் மூலமே 7.8 சதவீத உண்மை வளர்ச்சி சாத்தியமானது போல் தோற்றம் அளிப்பதாகவும், எனவே இந்த 7.8 சதவீத வளர்ச்சி எண் உண்மையான பொருளாதார நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கிறதா என்பதில் தமக்கு வலுவான சந்தேகம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நிதிச் செயலாளரின் இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மத்திய மோடி அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. விளம்பரங்கள் மூலம் புள்ளிவிவரப் படத்தை வேண்டுமானால் அழகாக்க முடியுமே தவிர, நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை மாற்ற முடியாது என்று காங்கிரஸ் தலைவர்கள் சாடியுள்ளனர். எனினும், இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள மத்திய புள்ளியியல் அமைச்சகம், புதிய அடிப்படை ஆண்டு மாற்றங்களின் அடிப்படையிலேயே கணக்கீடுகள் முறைப்படி செய்யப்பட்டுள்ளதாகவும், 7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சி முற்றிலும் சரியானது என்றும் விளக்கமளித்துள்ளது.